மும்பை: நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளை கட்டமைக்கும் நோக்கில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, இருந்தாலும் மின்சார வாகனங்களுக்கு அத்தியாவசியமாக கருதப்படும் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருக்கிறது. இதனாலேயே மக்கள் எலக்ட்ரிக் கார்களை வாங்க யோசித்து வருகிறார்கள்.

இந்த பிரச்னையை தீர்க்க மஹிந்திரா & மஹிந்திரா , அதானி டோட்டல் கேஸ் நிறுவனமும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதுமட்டுமின்றி மின்சார வாகனங்கள் தொடர்பான அனைத்து தீர்வுகளையும் வழங்க கூடிய கட்டமைப்புகள் நாடு முழுவதும் உருவாக்கப்படும் என்று இரு நிறுவனங்களும் சேர்ந்து வெளியிட்ட கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் இடையிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் நாட்டின் பெரும்பாலான இடங்களில் சார்ஜிங் செய்யும் வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.
அதானி நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் நிறுவன மின்சார வாகன வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் உரிய வகையில் சார்ஜிங் சேவைகளைப் பெற்று மின்சார வாகனங்களை எந்த தடையும் இன்றி பயன்படுத்த முடியும் என மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் பிஜே நக்ரா தெரிவித்துள்ளார்.
தற்போது மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரிய கவலையாக இருப்பது சார்ஜிங் நிலையங்கள் இல்லாதது தான். இத்தகைய சார்ஜிங் நிலையங்களை அமைப்பதன் மூலம் நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் கார்பன் வெளியீடு குறையும் என்றும் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர் சுரேஷ் பி மங்கலானி தெரிவித்துள்ளார். இதன் மூலம் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கான பூஜ்ய கரியமில வாயு வெளியீடு என்ற இலக்கை இந்தியா எட்டுவது எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு என்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்று முறைகளை மக்கள் தேர்வு செய்து வருகின்றனர் . மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என்ற நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளன.
குறிப்பாக மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது . இதனை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முனைப்பு காட்டி வருகின்றன இந்தியாவில் பாரம்பரியமாக பெட்ரோல், டீசல் வாகனங்களை விற்பனை செய்து வந்த பல்வேறு நிறுவனங்கள் தற்போது தங்களின் கவனத்தை முழுவதுமாக மின்சார வாகனங்கள் பக்கம் திரும்பி உள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications