எங்கும் டிஜிட்டல், எதிலும் டிஜிட்டல் என்பதை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் தங்களுடைய பெரும்பாலான ஆதார் சேவைகளை மக்கள் வீட்டிலிருந்தே செய்து கொள்கின்றனர். இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் கார்டை வழங்கும்போது, இதுபோன்ற வசதிகள் இல்லை. ஆனால் அதன் பிறகு ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய வேண்டுமானால் மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காகவே ஆன்லைன் சேவைகளை கொண்டு வந்தது. அப்படி கொண்டுவரப்பட்டது தான் "mAadhaar" ஆப்.
ஆனால் விரைவில் "mAadhaar" ஆப்-இன் செயல்பாட்டை நிறுத்த இருப்பதாக UIDAI தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக புதிய "Aadhaar" என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்ளிகேஷனை ஆண்ட்ராய்டு மொபைலாக இருந்தால் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் போன்களாக இருந்தால் ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்றவற்றில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இது குறித்த UIDAI தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் ஒரு போஸ்ட்டை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இருந்த mAadhaar ஆப்பை விட, தற்போது உருவாக்கப்பட்டுள்ள Aadhaar ஆப் இன்னும் வேகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சேவையை மக்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. எந்த ஒரு ஆப் உருவாக்கப்பட்டாலும், மொழி பிரச்சனை பரவலாக பேசப்படும். இதைக் கருத்தில் கொண்டு யூஐடிஏஐ புதிய ஆதார் அப்ளிகேஷனை 13 இந்திய மொழிகளில் கிடைக்கும் வகையில் வடிவமைத்துள்ளது.

சமீப காலமாக நடக்கும் மோசடி சம்பவங்களை கருத்தில் கொண்டு ஆதார் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் கார்டு விபரங்களை பகிரும்போது பாதுகாப்பாக பகிரும் வகையில் க்யூஆர் கோட் வசதியை பயன்படுத்தலாம்.
அடுத்ததாக புதிய ஆதார் ஆப்-இல் வந்திருக்கும் வசதி தான் மிகவும் முக்கியமானது. சில இடங்களில் ஆதார் தகவல்களை வழங்க வேண்டிய சூழ்நிலை வரும். ஆனால் எல்லா விவரங்களையும் மற்றவர்கள் பார்ப்பதற்கு நமக்கு விருப்பம் இருக்காது. இது போன்ற நேரத்தில் எந்த தகவல்களைப் பகிர வேண்டும் என்பதை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.
உதாரணமாக உங்கள் பெயர், புகைப்படம், முகவரி போன்றவற்றை பகிர வேண்டுமா? வேண்டாமா? என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல உங்கள் ஆதார் விபரங்களை ஃபிங்கர் பிரிண்ட், ஃபேசியல் ஆதண்டிகேஷன் மற்றும் கண் விழி மூலமாக லாக் செய்து வைக்கலாம். இதனால் யாரும் உங்களுடைய தகவல்களை பார்க்க முடியாது. தேவைப்படும்போது இந்த லாக்கை நீங்களே அன்லாக் செய்யும் வசதியும் உள்ளது.
ஏற்கனவே பழைய mAadhaar ஆப்பை பயன்படுத்தியவர்கள், தற்போது புதிய ஆதார் ஆப்-பிற்கு மாறும்போது டேட்டா அப்படியே வந்து விடுமா? என்று நினைக்கின்றனர். ஆனால் இதற்கு UIDAI தரப்பில் எந்த விளக்கமும் வழங்கவில்லை. எனவே புதிய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்த பிறகு உங்களுடைய விபரங்களை மீண்டும் ஒருமுறை பதிவு செய்து ப்ரொபைலை செட்டப் செய்வது அவசியம்.


Click it and Unblock the Notifications