மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டம், நூற்றாண்டு காலமாக வைரச் சுரங்கங்களுக்குப் பெயர் பெற்றது. கடும் உழைப்பின் மூலம் வருமானம் ஈட்டிவரும் ஏழைத் தொழிலாளர்களுக்கு இந்தச் சுரங்கங்கள் நம்பிக்கையின் ஒளியாகத் திகழ்கின்றன. அத்தகைய நம்பிக்கையில் இருந்த ராஜு கோண்ட் என்ற தொழிலாளிக்கு திடீரென அதிர்ஷ்டம் கிடைத்தது. பத்தாண்டுகளாக வைரத் தேடலில் ஈடுபட்டிருந்த அவருக்குக் கிடைத்த 19.22 கேரட் வைரம், அவரது வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. இது எப்படி நடந்தது என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ராஜு கோண்ட் மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா சுரங்கங்களில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி. இவர் புதன்கிழமை அன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் கண்ணுக்கு மின்னும் கண்ணாடி போல ஒன்று தென்பட்டுள்ளது. அதை கையில் எடுத்து பார்த்த பிறகு தான் அவருக்கு தெரியவந்தது, அது 19.22 கேரட் வைரம் என்று. இந்த வைரத்தின் மதிப்பு சுமார் ரூ. 80 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பால் மகிழ்ச்சியடைந்த ராஜு கோண்ட், தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இந்தப் பணத்தை செலவிட விரும்புவதாக தெரிவித்தார். தனது குடும்பத்தின் 5 லட்சம் ரூபாய் கடனை அடைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தில் சொந்த வீடு கட்டி, விவசாய நிலம் வாங்க திட்டமிட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான பன்னாவில் பல நூற்றாண்டுகளாக வைரச் சுரங்கங்கள் அதிக அளவில் இருந்து வருகிறது. ஆனால் பன்னாவில் உள்ள வைரங்கள் தற்போது கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான சுரங்க நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டது தான் என்று கூறப்படுகிறது. இதன் பிறகு, இந்தப் பகுதிகளில் இதே போன்ற பெரிய வைரம் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ராஜு கோண்ட் போன்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு வைரச் சுரங்கம் வாழ்வாதாரமாக இருக்கிறது. ஆனால், அவர்கள் சம்பாதிக்கும் தொகை மிகக் குறைவு. அரசு, இந்தப் பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
ராஜுவை போலவே மற்றொரு நபர் கடந்த ஆண்டு நொய்டா பகுதியில் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 8 கேரட் வைரத்தை கண்டுபிடித்தார். பல வருடங்களாக பன்னாவில் பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரத்தின் மாற்று ஆதாரமாக வைரச் சுரங்கங்கள் இருந்து வருகின்றன. இங்கு 8 மணி நேரம் வேலை செய்தால் ரூ. 250 முதல் ரூ. 300 ரூபாய் வருமானம் இவர்களுக்கு கிடைக்கிறது.
தற்போது ராஜு கண்டுபிடித்த அந்த வைரக்கற்களை அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். வைரக்கல் ஏலம் விடப்பட்டு அதன் பிறகு அவரிடம் அந்த தொகை ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications