மதுரை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தபடி மதுரை அருகே உள்ள மேலூர் பகுதியில் புதிய சிப்காட் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த சிப்காட்-க்கான 278 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தொழிற்பூங்கா அமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் மற்றொரு முக்கியமான அறிவிப்பு வந்து மதுரை மாவட்டத்தின் எதிர்காலத்திற்கு வலிமையான அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது. இப்படி என்ன அறிவிப்பு என்று தானே கேட்குறீங்க.
மதுரையில் 26,500 சதுர அடி பரப்பளவில் 3 ஏக்கர் நிலத்தில் சுமார் 24 கோடி ரூபாய் செலவில் ஒரு நவீன தொழில் புதுமை மையத்தை அமைக்க சிப்காட் திட்டமிட்டு, இதற்கான பரிந்துரையை அரசிடம் கொடுத்து ஒப்புதல் பெற்ற நிலையில், இதற்கான 3 ஏக்கர் நிலத்தையும் மதுரை மாநகராட்சி எல்லையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் அதிநவீன இன்டஸ்ட்ரியல் இன்னோவேஷன் சென்டர் அமைக்க உள்ளது, இதுபோன்ற சென்டர் தமிழ்நாட்டில் அமைக்கப்படுவது 3 முறையாகும். இதற்கு முன்பு முதல் முறையாக MSME நிறுவனங்களின் களஞ்சியமான ஓசூரில் அமைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டது. இந்த 2 இன்டஸ்ட்ரீயல் இன்னோவேஷன் சென்டர் அமைக்கப்பட்ட அனுபவத்தை அடிப்படையாக வைத்து மேம்பட்ட முறையில் மதுரையில் அமைக்கப்பட உள்ளது.
இந்த புதிய தொழில்நுட்ப மையத்திற்கான முக்கியத்துவமான பகுதிகளைக் கண்டறிவதற்காக, சிப்காட் அதிகாரிகளும் ஸ்டார்ட்அப்-டிஎன் அமைப்பின் ஆதரவுடன் மதுரையில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்தினர். இந்த நிகழ்வில் தென் மண்டலத்தைச் சேர்ந்த 233 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிப்காட் மேலாண்மை இயக்குனர் டாக்டர் கே. செந்தில்ராஜ், IAS, மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அரசு மேற்கொண்ட தொழில் வளர்ச்சியையும், மதுரையில் இன்னோவேஷன் சென்டர் அமைப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
ஸ்டார்ட்அப்டிஎன் இயக்குனர் மற்றும் சிஇஓ சிவராஜ் ராமநாதன், தென் மாவட்டங்களின் மைய பகுதியாக இருக்கும் மதுரையில் ஒரு புதுமை மையத்தின் அவசியம் மற்றும் தேவையைப் பற்றிய தகவல்களை வழங்கினார்.
மதுரையில் அமைக்கப்படும் இந்த அதிநவீன இன்டஸ்ட்ரியல் இன்னோவேஷன் சென்டர் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருக்கும் தொழில்துறை நிறுவனங்கள், MSME நிறுவனங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும். இந்த கூட்டத்திற்கு இப்பகுதியில் இருந்து பல தரப்பினர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் போர்ஜின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ விஷ் சஹஸ்ரநாமம், இவருடன் சிஐஐ மதுரை அமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கம், மதுரை தொழில் வளர்ச்சி சங்கம், Digitall Forum, சாப்ட்வேர் தொழில் வளர்ச்சி சங்கம் (SIDA), MADITSSIA மற்றும் வேளாண் உணவு வர்த்தக மையம் போன்ற அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications