மதுரை: தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுவதையும் பல்வேறு முதலீடுகள் ஈர்க்கப்படுவதையும் தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உற்பத்தி ஆலைகள் , டைடல் பார்க்குகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட நகரத்தோடு முடிந்து விடாமல் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் மதுரை மற்றும் சிவகங்கை இடையே இருக்கக்கூடிய இலுப்பைக்குடி பகுதியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டது . இதன்படி மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் இடையே இருக்கக்கூடிய இலுப்பைக்குடியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா 342 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. இலுப்பைகுடி , அரசனூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 775 ஏக்கர் பரப்பளவில் இந்த சிப்காட் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த சிப்காட்டிற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரக்கூடிய நிலையில் இங்கே ஆலைகளை நிறுவ பல்வேறு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் காலணி உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இலுப்பைக்குடி சிப்காட்டில் தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யக்கூடிய ஆலையாக இது அமையும் என்றும் இந்த உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டும் விழா கூடிய விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள கத்தார் நாட்டின் முன்னாள் அமைச்சரும் தொழில் குழும தலைவரருமான ஷேக் ஃபலா பின் ஜஸிம் அல் தானி முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு வருகை தர இருக்கிறார்.
இந்த தகவலை கோத்தாரி நிறுவன தலைவரான ஜின்னா ரஃபீக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரை சந்தித்து அழைப்பு விடுத்ததாகவும் அவரும் வருகை தர ஒப்பு கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். 1917 ஆம் ஆண்டு சந்துலா மோதிலால் கோத்தாரி என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்.
இந்த நிறுவனத்தை பொருத்தவரை தற்போது ரஃபீக் இதன் தலைவராக செயல்பட்டு வருகிறார் . 125 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனம் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருகிறது. உரங்கள், உணவு பொருட்கள், டிஜிட்டல், தனிமங்கள், காலணி உற்பத்தி என பல்வேறு பிரிவுகளிலும் இந்த நிறுவனம் தீவிரமாக இயங்கி வருகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் பெரம்பலூரில் தன்னுடைய காலணி உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது . ஆண்டுக்கு இரண்டு மில்லியன் காலணிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை மாறி இருக்கிறது.
இலுப்பைக்குடி சிப்காட்டில் நிறுவப்படும் இந்த புதிய காலணி உற்பத்தி ஆலை மூலம் மதுரை மற்றும் சிவகங்கையை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோத்தாரி நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களோடு காலணி உற்பத்திக்கான ஒப்பந்தத்தை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications