அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் கடந்த சனிக்கிழமை அன்று திடீரென வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை நடத்தியது. இந்த ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெனிசுலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார்.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது ஒருபுறம் இருக்க வெனிசுலா எண்ணெய் வளங்களை அணுகும் பணிகளை டிரம்ப் நிர்வாகம் தொடங்கிவிட்டது. இதற்கிடையே நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதற்கு ஆதாரமாக டிரம்ப் வெளியிட்ட ஒரு புகைப்படம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிஸ்னஸை ஏற்படுத்தி தந்துள்ளது.

நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் சிறைபிடித்து நாடு கடத்தி இருக்கிறது. வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்கா அரசாங்கம் வெளியிட்டது. அந்த சமயத்தில் மதுரோ அணிந்திருந்த நைக் பிராண்டின் ஆடைகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெருமளவில் விவாதிக்கப்படக்கூடிய ஒரு விஷயமாக மாறியிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த ஆடை எங்கு கிடைக்கும் , என்ன பிராண்ட், இதன் விலை என்ன என்பது குறித்து தான் அதிகமாக தேடுகிறார்களாம். டிரம்ப் பகிர்ந்த புகைப்படத்தில் நிக்கோலஸ் மதுரோ நைக் பிராண்டின் டெக் டிராக் ஷூட்டை அணிந்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி இருந்தது.
நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை ஸூம் செய்து அதன் நிறம் என்ன, அவர் அணிந்திருக்கும் ஆடையின் சைஸ் என்ன என்பன உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த படம் வெளியான ஒரு மணி நேரத்திலேயே கூகுளில் பலரும் இந்த ஆடையை தேடி இருக்கிறார்கள் .
நைக் பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்த ஜாக்கெட் மற்றும் பேன்டின் விலை சுமார் 25 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நைக் இணையதளத்திலேயே சோல்டு அவுட் என வந்துவிட்டதாம் அந்த அளவிற்கு பலரும் இதனை ஆர்டர் செய்துள்ளனர்.
இந்தியாவிலும் கிட்டதட்ட இதற்கு மேட்சிங்கான ஆடை ஈகாமர்ஸ் தளங்களில் கிடைக்கிறது. இதன் விலை சுமார் 6,995 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவை எதிர்த்து வெனிசுலா அதிபரானவர், ஆனால் அமெரிக்க பிராண்டின் ஆடையை அணிந்திருக்கிறார் என நெட்டிசன்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.
இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் மதுரோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறது. அவருக்கு தண்டனை ஏதும் வழங்கப்படுமா, இதனை சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எப்படி எதிர்கொள்ள போகின்றன என்பதை உலகமே உற்றுநோக்குகிறது.


Click it and Unblock the Notifications