தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக துணி வாங்குவது, பட்டாசு ஆர்டர் செய்வது என மக்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களுக்கு தீபாவளியை முன்னிட்டு பணம் முன்கூட்டியே வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக மாதம் தோறும் 15ஆம் தேதி தான் மகளிர் உரிமை தொகை பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். நவம்பர் மாதம் தீபாவளி மாதமாக இருக்கிறது. அதுவும் 8ஆம் தேதியே பண்டிகை வந்துவிடுகிறது. தீபாவளி செலவுக்கு பயன்படும் வகையில் முன்கூட்டியே மகளிர் உரிமை தொகையை வரவு வைத்தால் நன்றாக இருக்கும் என்பதே லட்சக்கணக்கான பெண்களின் எதிர்பார்ப்பு.

அதன்படி, நவம்பர் முதல் வாரத்தில் அல்லது தீபாவளிக்கு முன்பாக மகளிர் உரிமை தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவது குறித்து அரசு பரிசீலனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தீபாவளி பண்டிகை 8-ம்தேதி வரும் நிலையில் உரிமை தொகையை முன்கூட்டியே வழங்கினால் பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் என அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் பண்டிகைக்கான செலவுகளை முன்கூட்டியே திட்டமிட முடியும்.
தீபாவளிக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் ஆடைகள், மளிகை பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க இந்த தொகை உதவியாக இருக்கும் என பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை எல்லாம் விலை ஏறியுள்ளதால் முன்கூட்டியே பணம் வந்தால் நன்றாக இருக்கும் என கருதுகின்றனர்.
தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இந்த திட்டத்தை அப்படியே தொடர்ந்து வருகிறது. இதனை மாதம் 2500 ரூபாயாக உயர்த்தும் திட்டமும் அரசிடம் இருக்கிறது. விரைவில் அது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஏராளமான பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications

