தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை ரேஷன் அட்டை அடிப்படையில் தேர்ந்தெடுத்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை கலைஞர் மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது . இந்த 1000 ரூபாய் உரிமை தொகையானது நேரடியாக குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு விடுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பம் செய்ய விரும்பும் குடும்ப தலைவிகள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதுவரை இலட்சக்கணக்கான பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பம் செய்திருக்கின்றனர்.

தொடக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யக்கூடிய பெண்களுக்கு 45 நாட்களுக்குள்ளாகவே அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற தகவல் வழங்கப்பட்டு விடும் என சொல்லப்பட்டது. ஆனால் ஜூலை மாதமே விண்ணப்பம் செய்த பலருக்கும் இதுவரை எந்த ஒரு தகவலும் வரவில்லை. இந்த நிலையில் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்தில் குடும்பத் தலைவிகள் ஆழ்ந்துள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பம் செய்தவர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்காக கள அதிகாரிகளை நியமனம் செய்திருக்கிறது. அரசு நியமித்திருக்கக்கூடிய இந்த அதிகாரிகள் நேரடியாக அந்த குடும்பத் தலைவிகளின் இல்லங்களுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் நேரடியாக அவர்களின் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த விண்ணப்பத்தில் அவர்கள் பூர்த்தி செய்திருக்க கூடிய விவரங்கள் உண்மைதானா கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு இவர்களுக்கு உண்மையிலேயே தகுதி இருக்கிறதா அவர்களின் பொருளாதார நிலை என்ன என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் ஆய்வு செய்ய இருக்கின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது 100 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சுமார் 17 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதால் அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த ஏரியாக்களுக்கு என அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் கள ஆய்வினை தொடங்கி இருக்கின்றனர் . எனவே விண்ணப்பத்தில் ஏதேனும் தவறான தகவல்களை கொடுத்திருந்தால் கூட அதிகாரிகள் அவற்றை கண்டறிந்துவிடுவார்கள். இதனை அடுத்து அவர்கள் உள்ளீடு செய்யக்கூடிய தகவலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் .
கள ஆய்வு முடிய இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் ஜனவரி மாதத்தில் இருந்து தகுதி வாய்ந்த பெண்களுக்கு இந்த 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .


Click it and Unblock the Notifications