சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு தான் தொடங்கியது. தமிழ்நாட்டைப் பின்பற்றி மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. குடும்பத்தின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் பணம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
இதன்படி அரசின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மாதம்தோறும் 15ஆம் தேதி 1000 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.16 கோடி பெண்கள் மாதம்தோறும் மகளிர் உரிமை தொகையை பெற்று வருகின்றனர்.

இந்தத் திட்டம் தங்களுக்கு பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கிறது என பெண்கள் கூறி வருகின்றனர். பலரும் தங்களுக்கு வரும் தொகையை சேமிப்பு திட்டங்களுக்கு மாற்றி எதிர்காலத்திற்காக சேமித்து வருகின்றனர்.
பெண்களின் உழைப்புக்கு பொருளாதார மதிப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த திட்டத்தை தொடங்கியது. கிட்டத்தட்ட 14 மாதங்களாக பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாயை பெற்று வருகின்றனர்.
ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் இருக்கும் குடும்பத்தலைவி தேர்வு செய்யப்பட்டு இந்த மகளிர் உரிமை தொகையானது வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 2.5 லட்சத்திற்கும் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்தில் இணைந்து உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக ரேஷன் அட்டை வாங்கியவர்கள் அனைவரும் தற்போது விண்ணப்பம் செய்து வருகின்றனர். கூடிய விரைவில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆன்லைன் வாயிலாகவே அறிந்து கொள்ள முடியும். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நீங்கள் விண்ணப்பம் செய்து அதன் நிலை தெரியாமல் இருந்தால் இந்த https://kmut.tn.gov.in/index.html இணையதளத்திற்கு சென்று உங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.
இதன் முகப்பு பக்கத்தில் "உங்கள் விண்ணப்பத்தின் நிலை அறிய" என்ற ஒரு இணைப்பு இருக்கும். அதனை கிளிக் செய்தால் அதில் பொதுமக்கள் உள் நுழைவு என்ற பிரிவினை கிளிக் செய்ய வேண்டும். உங்களது ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இதனை தொடர்ந்து உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா அல்லது ஏற்கப்பட்டதா அல்லது தற்போது பரிசீலனையில் இருக்கிறதா என்பன உள்ளிட்ட விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
Written by: Devika


Click it and Unblock the Notifications