தமிழ்நாடு அரசு மகளிருக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகளில் 3 தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை: தமிழ்நாடு அரசு தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளை ரேசன் அட்டை அடிப்படையில் தேர்வு செய்து மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. 2023ஆம் ஆண்டு முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேசன் அட்டை அடிப்படையில் குடும்பத்தில் இருப்பவர்களின் வருமானம் உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்பட்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஜூலை 15 முதல்: பலரும் தங்களுக்கு தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என கூறி வந்தனர். இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், இந்த திட்டத்தில் கடந்த முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தார்.
நிபந்தனைகள் தளர்வு: ஜூலை 15 முதல் நடைபெறும் முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் முதலே பணம் கிடைத்து விடும் என அரசு அறிவித்துள்ளது. இது பெண்களை இன்னும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது என நிபந்தனை இருக்கிறது. இந்த நிபந்தனையை தான் அரசு தற்போது தளர்த்தி இருக்கிறது. இதுதொடர்பான அரசாணையை சிறப்பு திட்ட செயலாக்கத்துறைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார்.
4 சக்கர வாகனம் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 3 முக்கிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசுத்துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் அல்லாத பெண்கள் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு மூலமாக மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பிற தகுதிகளை பூர்த்தி செய்து எந்த வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை என்றால் இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் பெற விண்ணப்பிக்கலாம்.
ஓய்வூதியம் பெறும் குடும்பத்தை சேர்ந்த பெண்கள்: இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம். கணவரால் கைவிடப்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேலாகியும் திருமணம் ஆகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications