இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இம்மாநில அரசு தினமும் இரவு 8 மணி முதலும், வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் லாக்டவுன் அறிவித்துள்ளது.
இதனால் அம்மாநிலத்தில் இருக்கும் தொழிற்சாலைகளின் உற்பத்தி மட்டும் அல்லாமல் வர்த்தகமும் அதிகளவில் பாதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், லாக்டவுன் மூலம் ஏற்படும் பாதிப்புகளைக் கேர் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.
ரூ.40,000 கோடி இழப்பு
கேர் ரேட்டிங்க்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மகாராஷ்டிரா மாநிலம் தற்போது அறிவித்துள்ள லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, உற்பத்தித் துறை அதிகளவில் பாதிக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த லாக்டவுன் மூலம் சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி
இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் GVA அளவீட்டில் 0.32 சதவீதம் பாதிக்கப்படும் எனக் கேர் ரேட்டிங்க்ஸ் கணித்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருளாதாரம் 11 முதல் 11.2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனக் கடந்த வாரம் கணிக்கப்பட்டு இருந்து நிலையில் தற்போது இதன் அளவீடு 10.7 சதவீதம் முதல் 10.9 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கை
இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கையில் சுமார் 60 சதவீதம் மகாராஷ்டிரா பதிவு செய்து வரும் காரணத்தால் மிகப்பெரிய ஆபத்தான கட்டத்தில் மகாராஷ்டிரா உள்ளது என்றால் மிகையில்லை. இதைக் கட்டுப்படுத்தவே 2வது அலையில் முதல் மாநிலமாக லாக்டவுன் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
gross value added அளவு
2022 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த gross value added (GVA) 137.8 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ள நிலையில், இதில் மகாராஷ்டிராவின் பங்கு 20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். தற்போது வெளியான கணிப்பின் படி சுமார் 2 சதவீதம் அளவிலான பாதிப்பை மகாராஷ்டிரா எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் நிலை
தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து வரும் நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தேர்தலுக்குப் பின் சென்னை உட்பட அனைத்து பெரு நகரங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. சென்னை, கோவை, சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications