உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக மகாபலிபுரம் இருக்கிறது. சென்னைக்கு அருகே அமைந்திருக்கக் கூடிய மகாபலிபுரம் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இங்கு இருக்கக்கூடிய பழமையான சிற்பங்களை கண்டு ரசிப்பதற்காகவே நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர்.
குறிப்பாக வெளிநாட்டை சேர்ந்த பலரும் மகாபலிபுரத்திற்கு வருகை தருவதை நம்மால் காண முடிகிறது. இந்த நிலையில் மகாபலிபுரத்தில் ரோப் கார் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்து இருக்கிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை போல சென்னை மெட்ரோ ரயில் கழகம் மகாபலிபுரம் மற்றும் மலை பிரதேசங்களான ஊட்டி ,கொடைக்கானல் ஆகிய இடங்களில் ரோப் கார் அடிப்படையிலான போக்குவரத்து வசதிகளை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருக்கிறது.

இதற்காக ஆய்வறிக்கைகளை நடத்துவதற்கு கன்சல்டண்ட் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறது சென்னை மெட்ரோ ரயில் கழகம். முதல் கட்டமாக மகாபலிபுரத்தில் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு ரோப் கார் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி கடற்கரை கோயில் வரை ரோப் கார் சேவை வழங்கப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ரோப் கார் சேவைகளை கொண்டு வர வேண்டும் என்ற மாநில அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. விரிவான ஆய்வறிக்கை முடிந்த பின்னர் இது அரசின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். மகாபலிபுரம் மட்டுமில்லாமல் சென்னையில் இரண்டு இடங்களில் ரோப் கார் சேவைகளை கொண்டு வரும் திட்டமும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தரமணி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திலிருந்து கந்தன்சாவடி மெட்ரோ வரை 1.7 கிலோமீட்டர் நீளத்துக்கு ரோப் கார் சேவை கொண்டு வர திட்டமிருப்பதாகவும் அதனை தொடர்ந்து கந்தன்சாவடியில் இருந்து பாலவாக்கம் வரை 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு அதனை விரிவாக்கம் செய்ய திட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.
மகாபலிபுரம் உலக அளவில் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல்லவர்களால் வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்களும் சிற்பங்களும் இங்கே வருபவர்களை கவனம் ஈர்க்க செய்கிறது. மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் ,ஐந்து ரதம் ,அர்ஜுனன் தபசு ஆகியவை பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக பராமரிக்கப்படுகின்றன.
வார இறுதி நாட்களில் ஏராளமானவர்கள் வருகை தருவதால் இங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் ரோப் கார் சேவைகளை கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications