விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை பெரும் பிரச்சனை. அதுவும் வறட்சியான பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு முதன்மையான நீர் ஆதாரம் பருவ மழை தான். அப்படித்தான் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி, வறட்சியான பகுதியில் வசித்துக்கொண்டு.. டிராகன் பழ சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். இதிலிருந்தே லட்சங்களில் வருமானமும் பார்த்து வருகிறார்.
சமாதான் கங்குடே என்ற நபர் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு குடும்பத்தினருடன் விவசாயத்தில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் அவருடைய குடும்பம் 4 ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் இதற்கு அதிகப்படியான நீர் தேவை. இருந்தாலும் குறைந்த வருமானமே கிடைக்கும். இதை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கங்குடே மாற்றுப் பயிர்களைத் தேடினார்.

கரும்பு சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமானம் கிடைத்தது. ஆனால் அதற்கான செலவு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை ஆனது. எனவே வறட்சியான பகுதியில் இருந்து கொண்டு குறைந்த நீரில் அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் என்னென்ன என்பதை தேட தொடங்கினார்.
2020-ஆம் ஆண்டில் கிருஷி விஞ்ஞான் கேந்திராவிற்குச் சென்று ஆலோசனை பெற்றார். அப்போதுதான் கள்ளிச்செடி இனத்தைச் சேர்ந்த டிராகன் பழங்கள் வறட்சியான நிலத்திலும் வளரக்கூடியது என்பதைத் தெரிந்து கொண்டார். இதை தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஏக்கர் நிலத்தில் டிராகன் பழ சாகுபடி செய்ய ஆரம்பித்தார். வியட்நாமிலிருந்து ஜம்போ ரெட் ரகத்தைச் சேர்ந்த 2,800 செடிகளை விலை கொடுத்து வாங்கினார். ஒவ்வொரு செடியின் விலையும் 80 ரூபாய். 2800 செடிகளை வாங்குவதற்காக ஆரம்ப கட்ட முதலீடாக ரூ.2.24 லட்சம் வரை செலவு செய்தார்.
டிராகன் பழங்களை பொறுத்தவரையில் செடிகளை நட்ட 18 மாதங்களில் இருந்து அவை காய்க்க தொடங்கும். ஆனால் அதற்கு முறையான பராமரிப்பு அவசியம். ஒரு முறை செடி நடும் பட்சத்தில் சுமார் 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து பழங்களைத் தரும்.
கங்குடேவின் முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கவே தன்னுடைய 3 ஏக்கர் நிலத்திலும் டிராகன் பழ செடிகளை நட்டார். இதற்காக மொத்தமாக அவர் செய்த முதலீடு ரூ.4 லட்சம். அவருடைய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியது. டிராகன் செடிகளை விதைத்த 18 மாதங்களில் மகசூல் கிடைக்க ஆரம்பித்தது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் சுமார் 75 டன் டிராகன் பழ சாகுபடி செய்தார். ஆனால் இந்த முறை பருவமழை அவ்வளவு சிறப்பாக இல்லாததால் மகசூல் 58 டன்னாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் கிலோ ஒன்றை 105 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறார். இதனால் அவருடைய 3 ஏக்கர் நிலத்திலும் மொத்தமாக ரூ. 52 முதல் ரூ. 53 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.
இதில் ஒவ்வொரு ஏக்கருக்கும் சாகுபடி செலவாக ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரை ஆகிறது. இதையெல்லாம் கழித்தது போக ஒரு ஏக்கருக்கு ரூ.14.5 முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. 2025-ஆம் ஆண்டு கங்குடேவின் பண்ணையிலிருந்து ரூ.72.75 லட்சம் வரை டர்ன்ஓவர் கிடைத்துள்ளது.
இவருக்கு கிடைக்கும் லாபத்திற்கு மற்றொரு முக்கிய காரணம் என்ன தெரியுமா? அவருடைய விற்பனை உத்தி. கொல்கத்தா, கான்பூர், குஜராத், புனே ஆகிய நகரங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக கங்குடேவின் பண்ணைக்கே வந்து பழங்களை வாங்கி செல்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் அவருடைய பண்ணையின் வாசலிலேயே விற்பனை செய்வதால் மார்க்கெட்டுக்கு பழங்களை கொண்டு செல்லும் போக்குவரத்துச் செலவும் மிச்சம் ஆகிறது.
தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் வறட்சியை மட்டுமே நினைத்து கவலைப்படாமல் மாற்று வழிகளை சிந்தித்ததே கங்குடே இவ்வளவு பெரிய சாதனையை எட்டியதற்கு காரணம். பிரச்சினைகளை மட்டுமே பார்க்காமல் பிற வழிகளையும் ஆராய்ந்தால் எத்தகைய சூழலையும் கடந்து செல்ல முடியும் என்பதற்கு இவருடைய கதை மிகச் சிறந்த உதாரணம்.


Click it and Unblock the Notifications
