இந்தியா பலதரப்பட்ட வருமானம் கொண்ட மக்கள் நிறைந்த ஒரு நாடு. இது இந்தியாவுக்கு பெரிய வரமாக பார்க்கப்பட்டாலும் வறுமையான சூழலில் வாழக்கூடிய மக்களுக்கு இது பெரிய சாபம் என்று கூறலாம் .
ஏழ்மை நிலையில் வாழக்கூடிய மக்களுக்கு கடன் என்பது அவர்களின் வாழ்நாள் வருமானத்தையே அழிக்கக்கூடிய ஒரு பெரிய மிருகம். தற்போது கடன் எனும் இந்த மிருகம் ஒரு நபரின் கிட்னியையே காவு வாங்கி இருப்பது தான் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவமாக இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஷன். விவசாயத்தில் ஈடுபட்டு வந்த இவருக்கு அந்த தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்தது.

இதனை அடுத்து மாடு வாங்கி பால் விற்பனை செய்யலாம் என முடிவு செய்தார் இதற்கு தன்னிடம் போதிய பணம் இல்லாததால் 2021ஆம் ஆண்டில் உள்ளூரை சேர்ந்த கந்துவட்டிக்காரரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு கடன் வாங்கி இருக்கிறார் . அந்த பணத்தில் மாடுகளை வாங்கிய நிலையில் அவர் தொழில் தொடங்குவதற்கு முன்பாகவே அந்த மாடுகள் இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
ஒருபுறம் விவசாயத்திலும் நஷ்டம் மறுபுறம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை , கடன் வாங்கி வாங்கிய மாடுகளும் இறந்து விட்டன இப்படி வாழ்க்கை அடுத்தடுத்த சிக்கல்களை தந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கொடுக்கும்படி இவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள். இவர் வாங்கிய கடன் மாதத்திற்கு 40% வட்டி கொண்டதாம் இது போக வட்டியை செலுத்த தவறினால் ஒவ்வொரு நாளுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமாம்.

இந்நிலையில் தன்னிடமிருந்து டிராக்டர் , விவசாய நிலம், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் விற்பனை செய்து அவர் கடனை கொடுக்க முயன்றார் . ஆனால் அவருடைய ஒரு லட்ச ரூபாய் கடன் வட்டி குட்டி போட்டு 74 லட்சம் ரூபாயாக மாறியது. தன்னுடைய கடனை திரும்ப செலுத்த முடியாமலும் கந்துவட்டிகாரர்களின் நெருக்கடியாலும் சிக்கி தவித்தார்.
இந்நிலையில் தன்னுடைய சிறுநீரகத்தையே விற்பனை செய்து கடனை அடைக்க முன் வந்துள்ளார். இதற்காக ஒரு ஏஜெண்டை அணுகினாராம். அவரை அவர்கள் மருத்துவ பரிசோதனைகள் முடித்து 2024ஆம் ஆண்டின் இறுதியில் அவரை கம்போடியாவுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே 8 லட்சம் ரூபாய்க்கு இவரின் கிட்னி விற்பனை செய்யப்பட்டது. விற்பனை செய்த பிறகும் கடனை அடைக்க முடியவில்லை ,தாயகத்திற்கும் வர முடியவில்லை.
இந்த நிலையில் கட்னை அடைக்க கொத்தடிமையாக வைத்து சாகும் வரை வேலை செய்ய வேண்டும் என ஏஜெண்டுகள் கூறிவிட்டார்களாம். இதற்கிடையே அங்கிருந்து வர முடியாமல் தவித்து வந்த அவர் ஒரு வழியாக வாட்ஸ் அப் மூலம் பிரம்மபுரி தொகுதி எம்எல்ஏவுக்கு தகவல் கொடுத்து அரசு ரீதியாக அழுத்தம் தந்த நிலையில் அவர் திரும்ப வந்திருக்கிறார். தற்போது காவல்துறையினர் கந்துவட்டிக்காரர்களை கைது செய்து உடல் உறுப்பு திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications