மும்பை: ரிலையன்ஸ் குழுமம் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வரக்கூடிய உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு மாநில அரசுகளும் முதலீடுகளை ஈர்க்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் இதற்காக டாவோஸ் நகருக்கு சென்றுள்ளார். தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நிறுவன தலைவர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் மகாராஷ்டிரா மாநில அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் 3.05 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது.

இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு துறைகளில் மூன்று லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. இது தொடர்பான ஒப்பந்தத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸும் ரிலையன்ஸ் குழும இயக்குனர்களுல் ஒருவரான ஆனந்த் அம்பானியும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரீடைல் ,ஹாஸ்பிடாலிட்டி மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் 3 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ள ஆனந்த் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான ரிலையன்ஸ் சிறந்த நாடாக இந்தியாவை உயர்த்துவதற்கு தொடர்ந்து துணை நிற்கும் என கூறியுள்ளார். கூடிய விரைவில் மகாராஷ்டிரா மாநிலம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட இருக்கிறது. இதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். அதேபோல பிரதமர் நரேந்திர மோடியின் விக்ஷித் பாரத் திட்டம் இந்தியாவில் பெரிய மாற்றத்தை கொண்டு வர இருக்கிறது என ஆனந்த் அம்பானி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில அரசு உலக பொருளாதார உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இதுவரை 10.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளில் கையெழுத்திட்டுள்ளது. டாடா நிறுவனம் இதன் ஒரு பகுதியாக 30,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது. எஸ்ஸார் ரினிவபில்ஸ் நிறுவனம் 8000 கோடி ரூபாயையும், யுபிஎல் நிறுவனம் 6500 கோடியையும் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்துள்ளன.
ஒலெக்ட்ரா கிரீன் டெக் நிறுவனம் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை மகாராஷ்டிராவில் நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல பல்வேறு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. மின்சார வாகனம், உற்பத்தி, பசுமை எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications