மதுப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய இந்தியாவின் மகாத்மா காந்தியின் படம் பீர் பாட்டிலின் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்த மதுபான நிறுவனங்கள் அவ்வப்போது இவ்வாறு மகாத்மா காந்தியின் படத்தை மதுபான பாட்டிலில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள பீர் டின்னில் மகாத்மா காந்தியின் படத்துடன் கையொப்பமும் இடம் பெற்றுள்ளது. Rewort என்ற ரஷ்ய நிறுவனம் இந்த பீரை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்கள் மகாத்மா காந்தி மட்டுமல்ல நெல்சன் மண்டேலா, மதர் தெரசா, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் புகைப்படம் இடம்பெற்ற பீர் டின்களையும் அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் வாழ்நாளில் மது ஒழிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் மகாத்மா காந்தி ஆனால் அவரது படம் பீர் டின்னில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் பலரும் தங்களின் வலுவான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
மக்கள் நலனுக்காக பாடுபட்ட தலைவர்களின் படத்தை மதுபாட்டிலில் அச்சடிக்கும் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புவதாக சிலர் சாடியுள்ளனர். அதே போல விளம்பரம் தேடுவதற்காக சில நிறுவனங்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன என ஒரு நபர் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு இது தொடர்பாக கடுமையான கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மகாத்மா காந்தியின் புகைப்படம் பீர் டின்னில் இடம் பெற்றது இது முதல்முறையல்ல. கடந்த 2018 ஆம் ஆண்டில், FIFA உலகக் கோப்பை காலிறுதி போட்டியின் போது ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள ஒரு மதுபான விடுதியில் காந்தியின் புகைப்படத்துடன் கூடிய பீரை கால்பந்து ரசிகர்கள் அருந்திய வீடியோ இணையத்தில் பரவியது. அப்போதே பலரும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதே போல கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கனெக்டினெட் நகரை சேர்ந்த நியூஇங்கிலாந்து பிருவரீஸ் நிறுவனம் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய பீரை அறிமுகப்படுத்தியது. இந்த பீருக்கு காந்திபாட் என்ற பெயரிடப்பட்டிருந்தது.
பின்னர் ஐதராபாத் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. 1971 ஆம் ஆண்டு தேசிய தலைவர்களை அவமதிப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, நியூ இங்கிலாந்து பிருவரீஸ் நிறுவனம், இந்தியர்களின் மன உணர்வை தங்கள் நிறுவனம் புண்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications