பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கப்படும் ஒரு திட்டம்தான் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) திட்டம். இந்த திட்டம் மார்ச் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெண்களுக்கு நிதி சுதந்திரம் வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த MSSC திட்டம்.
டிசம்பர் 3, 2024-ஆம் ஆண்டு மத்திய நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சௌத்ரி அக்டோபர் 10-ஆம் தேதி 2024 வரையில் MSSC திட்டத்தின் மூலம் 43,30,121 கணக்குகள் திறக்கப்பட்டதாக தெரிவித்தார். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் பெண் முதலீட்டாளர்களுக்கு மார்ச் 31, 2025 வரையில் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த திட்டத்தில் இணைவதற்கான கடைசி தேதியாகும். அதன் பிறகு இந்தத் திட்டம் பயனர்களுக்கு கிடைக்காது. ஒருவேளை இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் செய்திகள் வாயிலாக வெளியாகும்.

தகுதி: இது பெண்களுக்கான பிரத்தியேக திட்டம் என்பதால் ஆண்கள் இதில் முதலீடு செய்ய முடியாது. மைனர் பெண் குழந்தைகளுக்காக அவர்களுடைய பாதுகாவலர்கள் கணக்கு தொடங்கலாம்.
குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச முதலீடு: MSSC திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 1,000 முதல் முதலீடு செய்யலாம் மற்றும் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 2 ஆண்டுகள்.
MSSC வட்டி விகிதம்: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு வருடத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. கூட்டு வட்டியின் மூலம் வருமானம் கிடைப்பதால் உங்களுடைய வருமானம் விரைவாக வளரும்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை தொடங்க தனி நபர்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் கிளைக்குச் செல்லலாம். கேஒய்சி ஆவணங்கள் (ஆதார் மற்றும் பான் கார்டு), புதிய கணக்கு வைத்திருப்பவர்களுக்கான கேஒய்சி படிவம் மற்றும் பே-இன்-ஸ்லிப் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் டெபாசிட் தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் கிடைக்கிறது. அதுவும் இன்னும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும். சில சூழ்நிலையின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறலாம். கணக்கு வைத்திருப்பவர் மரணித்தாலோ, கணக்கு வைத்திருப்பவருக்கு உயிருக்கு ஆபத்தான நோய் வந்தாலோ பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறலாம்.


Click it and Unblock the Notifications