புனே: இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை கையகப்படுத்தப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இரண்டு நிறுவனங்களும் தங்களுடைய பேச்சுவார்த்தையை முக்கிய கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் கூடிய விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்கள் வசம் இருக்கும் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்திடம் விற்பனை செய்ய இருக்கிறது. இவ்வாறு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வாங்குவதன் மூலம் இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட பணிகளை மஹிந்திரா நிறுவனமே மேற்பார்வையிடும் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு நிறுவனங்களும் புனேவின் ஜக்கான் பகுதியில் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கின்றன .இதன்படி மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆலை ஒரு ஆண்டுக்கு 8, 40,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது, அதேபோல ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் உற்பத்தி ஆலை 1,80,000 கார்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்தால் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கார் உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறும். அதுமட்டுமின்றி ஜக்கான் பகுதியிலுள்ள தங்களுடைய ஆலைகளில் மின்சார கார்களை உற்பத்தி செய்ய இரண்டு நிறுவனங்களும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் மின்சார கார்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதாக மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தில் கணிசமான பங்குகளை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வாங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் இரண்டு நிறுவனங்களும் இணைந்து புதிய கார் மாடல்களை வெளியிடலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தை பொருத்தவரை இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் அதற்கு இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களோடு கைகோர்க்க வேண்டும் என நீண்ட காலமாகவே திட்டமிட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய கார்களை விற்பனை செய்வதில் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் இந்த நிறுவனத்தின் கார் விற்பனை மூலம் கிடைத்த லாபம் 69% வரை சரிவடைந்துள்ளதாம். எனவே இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இந்த முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications