இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது, டாடா மோட்டார்ஸ் போலவே இந்திய கார் விற்பனை சந்தையில் தனக்கான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் மஹிந்திரா செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சமீபத்தில் அறிமுகம் செய்த அனைத்து கார்களும் மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவிலான வரவேற்பையும் வெற்றியையும் அடைந்துள்ளது.
இந்த நிலையில் ஜூன் காலாண்டு முடிவுகளை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இன்று வெளியிட்டு உள்ளது, இக்காலகட்டத்தில் மொத்த லாபமாக 2,773.73 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் 1,403.61 கோடி ரூபாய் உடன் ஒப்பிடுகையில் சுமார் 97.6 சதவீதம் அதிகமாகும்.

ஜூன் காலாண்டில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த வருமானம் 23 சதவீதம் அதிகரித்து 24,368 கோடி ரூபாயாக உள்ளது, மேலும் பிற வருமானம் பிரிவில் 140 கோடி ரூபாய் அளவில் இருந்து தற்போது 658 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் இதைத் தொடர்ந்து EBITDA அளவு 46.5 சதவீதம் அதிகரித்து 2,421 கோடி ரூபாயில் இருந்து 3,547 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. EBIT மார்ஜின் அளவு 5.3 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் செய்த முதலீடும், பெற்ற முதலீடும் தான் இக்காலாண்டு முடிவின் முக்கியமான விஷயமாக உள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ஆர்பிஎல் வங்கியில் 3.53 சதவீத பங்குகளைச் சுமார் 417 கோடி ரூபாய் முதலீட்டில் கைப்பற்றியது. இது மட்டும் அல்லாமல் ஆர்பிஎல் வங்கியில் தனது பங்கு இருப்பை அதிகரிக்கவும் தயாராக இகுக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இதை நீண்ட கால முதலீடாகப் பார்க்கிறது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திடம் இருக்கும் நிதியியல் சேவை பிரிவின் மதிப்பு 40000 கோடி ரூபாயாக உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் நிதியியல் சேவை பிரிவின் அடிப்படை புரிதல் அதிகரிக்கும் அதன் மூலம் தனது சொந்த நிதியியல் சேவை பிரிவை விரிவாக்கம் செய்ய முடியும் என மஹிந்திரா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் வியாழக்கிழமை சிங்கப்பூர் முதலீட்டு சேவை நிறுவனமான Temasek மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன கிளை நிறுவனமான Mahindra Electric Automobile Ltd-ல் சுமார் 1200 கோடி ரூபாய் முதலீடு செய்து கிட்டதட்ட 3 சதவீத பங்குகளைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் Mahindra Electric Automobile Ltd நிறுவனத்தின் முந்தைய மதிப்பீடான 70,070 கோடி ரூபாயில் இருந்து 80,580 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications