சென்னை: இந்திய ரயில்வே ஜூலை மாதத்தில் இருந்து ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கான விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் நாம் நம்முடைய செல்போன் வாயிலாகவே ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட முடிகிறது. ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளத்திற்கு சென்றாலே போதும் ரயில் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.
அமலுக்கு வரும் விதிமுறைகள்: ரயில்வே டிக்கெட் முன்பதிவில் குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவில் முகவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் தான் மத்திய ரயில்வே அமைச்சகம் தட்கல் டிக்கெட் முன்பதிவில் மூன்று முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் இவை அமலுக்கு வருகின்றன.

ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பு: நீங்கள் அடிக்கடி ரயில்களில் பயணம் செய்பவர் என்றால் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஐஆர்சிடிசி-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலி வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் தங்களுடைய ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைத்து இருப்பது கட்டாயமாகப்பட்டிருக்கிறது. உங்களின் ஐஆர்சிடிசி கணக்கில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து அதனை அங்கீகரித்திருக்க வேண்டும். இல்லை என்றால் உங்களால் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியாது. எனவே ஐஆர்சிடிசியில் கணக்கு வைத்திருக்கக்கூடிய பயனாளர்கள் ஜூலை 1ஆம் தேதிக்குள் தங்களுடைய ஐஆர்சிடிசி கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்து வைத்து கொள்ளுங்கள்.
ஓடிபி அங்கீகாரம்: ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தட்கல் டிக்கெட் முன்பதிவின் போதும் ஆதார் கணக்கு சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதியில் இருந்து தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு அதற்கு வரும் ஓடிபியை உள்ளீடு செய்தால் தான் டிக்கெட்டே பதிவு செய்ய முடியும். எனவே தட்கல் டிக்கெட் பதிவு செய்பவர்கள் ஆதார் எண், அத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். ஓடிபி உள்ளீடு செய்து அங்கீகரித்தால் தான் டிக்கெட் கிடைக்கும்.

முகவர்கள், டிக்கெட் கவுண்ட்டர்களில் புதிய விதிமுறை: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் கவுண்ட்டர்களுக்கு சென்றாலும் அங்கேயும் ஆதார் எண்ணை வழங்கி, அத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி பெற்று அதனை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு ஓடிபி மூலம் அங்கீகாரம் நடந்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். பயணிகள் சொந்தமாக இல்லாமல் முகவர்கள் மூலமாக முன்பதிவு செய்தாலும் சரி அல்லது நேரடியாக கவுண்ட்டர்களுக்கு சென்று முன்பதிவு செய்தாலும் சரி ஆதார் ஓடிபி சரிபார்ப்பு கட்டாயம்.
முகவர்களுக்கு முதல் 30 நிமிடம் டிக்கெட் கிடைக்காது: தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஏஜென்டுகள் ஆதிக்கம் இருக்கிறது, பயணிகள் முன்பதிவு செய்வதற்கு முன்னதாகவே அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இதன்படி தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கி முதல் 30 நிமிடங்களுக்கு முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. பயணிகள் அவர்களுடைய ஐஆர்சிடிசி கணக்கு வழியாக டிக்கெட்டினை முன்பதிவு செய்து கொள்வதற்கு முதல் 30 நிமிடங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
முதல் 30 நிமிடங்கள் : இதன்படி ஏசி வகுப்புகளுக்கு காலை 10 லிருந்து 10:30 மணி வரை பயணிகள் தனிப்பட்ட கணக்குகள் மூலம் டிக்கெட் பதிவு செய்யலாம் இந்த சமயத்தில் முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. ஏசி அல்லாத வகுப்புகளுக்கு 11 மணியிலிருந்து 11.30 மணி வரை பயணிகள் தனிப்பட்ட கணக்குகள் மூலம் டிக்கெட் பதிவு செய்யலாம் இந்த சமயத்தில் முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. எனவே ஐஆர்சிடிசி கணக்கு வைத்திருக்கக்கூடிய பயணிகள் தங்களுடைய கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து ஓடிபி சரிபார்ப்பு செய்து வைத்து கொண்டால் ஜூலை 1ஆம் தேதி முதல் எந்த இடையூறும் இல்லாமல் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications