நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் ஜிடிபி விகிதமானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக மோசமான அளவுக்கு வீழ்ச்சி கண்டது.
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டிற்கான ஜிடிபி விகிதங்களின் முந்தைய கணிப்புகளை, ஆய்வு நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. முன்னதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் -10.5 சதவீதம் குறையலாம் என கணித்திருந்தது. இதற்கு முன்பு -5 சதவீதமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் -11.8 சதவீதமாக சரியலாம் என கணித்துள்ளது. இது முன்பு -5.3 சதவீதமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார வளர்ச்சியினை பொறுத்த வரையில் ஃபிட்சின் மதிப்பீடு, 2020ம் நிதியாண்டில் ஓரளவு மேம்படலாம் என கணித்துள்ளது. ஏனெனில் கடந்த ஜூன் மாதத்தில் 4.6% ஆக வீழ்ச்சி காணலாம் என்று கணித்திருந்த நிலையில், தற்போது அதனை 4.4% ஆக மாற்றியமைத்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி விகிதம் ஜூன் காலாண்டில் மிக மோசமாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் சற்று மேம்படலாம் என ஃபிட்ச் கணித்துள்ளது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக லாக்டவுன் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வளர்ச்சியானது அடுத்து வரும் காலாண்டுகளில் அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதே இந்தியாவின் மூத்த பொருளாதார ஆலோசகர் சில முக்கிய துறைகளில் வி வடிவ வளர்ச்சி இருக்கலாம் என்றும் கூறியிருந்தார். கடந்த மார்ச் 25 அன்று நாடு தழுவிய லாக்டவுன் போடப்பட்ட நிலையில், மே மாதம் தொடங்கி சில தளர்வுகளை அவ்வப்போது இந்தியா அரசு அறிவித்து வருகின்றது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி சற்று மேம்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 9.6% ஆக வீழ்ச்சி காணலாம் என்றும், இதுவே டிசம்பர் காலாண்டில் 4.8% வீழ்ச்சி காணலாம் என்றும் கணித்துள்ளது. இதுவே ஜனவரி - மார்ச் காலாண்டில் 4% இருக்கலாம் எனவும் கணித்துள்ளது.
நடப்பு ஆண்டில் கொரோனாவின் காரணமாக உலகளவில் இந்தியா கடுமையான லாக்டவுனை அறிவித்தது. இதன் காரணமாக உள்நாட்டில் தேவையானது மிக கடுமையாக குறைந்தது. குறைந்த நிதி ஊக்கம், நிதி துறையில் உள்ள பலவீனமான நிலை, இதற்கிடையில் தொடர்ச்சியாக கொரோனா வழக்குகள் அதிகரிப்பு என பலவும், பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கின்றன.
கொரோனா வழக்குகள் அதிகரிப்பு காரணமாக இன்னும் சில மாநிலங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதம் வரையிலான கடுமையான விதிகளைப் போல் அல்ல எனவும் ஃபிட்ச் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதும், பரவலான பணி நிறுத்தங்களும் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கிறது என்றும் பிட்ச் கூறியுள்ளது. ஆக இது நிச்சயம் இந்தியாவினை இந்த விகிதங்கள் எச்சரிக்கின்றன என்று தான் கூற வேண்டும். பொருளாதார வளர்ச்சியினை தூண்ட அரசு தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் எதிர்ப்பார்ப்பு.


Click it and Unblock the Notifications