2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி உச்சவரம்பை உயர்த்துவார் மற்றும் பல்வேறு வரி சலுகைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை என்றாலும் வருமான வரி கணக்கு தாக்கலில் மேஜர் மாற்றத்தை அவர் அறிவித்துள்ளார். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யக்கூடிய ஒவ்வொரு நபரும் இதனை தெரிந்து கொள்வது கட்டாயம். இந்த பட்ஜெட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் முறையில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான 1961 ஆம் ஆண்டு இந்திய வருமான வரி சட்டம் தான் நடைமுறையில் இருக்கிறது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து வருமான வரி சட்டம் 2025 அதாவது புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வரும் எனக் கூறியிருக்கிறார். புதிய வருமான வரி சட்டத்தின்படி வருமான வரி கணக்கு தாக்கல் மிகவும் எளிமையாக்கப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அடுத்ததாக வருமானத்தை தவறாக கணக்கு காட்டினால் 200 சதவீத அபராதம் என்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது கவனக் குறைவு, கணக்கு பிழை, தவறுதலாக விட்டுவிடுதல் போன்ற நேர்மையான தவறுகளால் உண்மையான வருமானம் குறைத்து காட்டப்பட்டிருந்தால் அதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியில் 50 சதவீத தொகை மட்டுமே அபராதமாக விதிக்கப்படும். ஒரு வேளை வேண்டுமென்றே தவறான அல்லது போலியான தகவல்களை அனுப்புவது, வருமானத்தின் மூலத்தை தவறாக காட்டுவது, வருமானத்தின் தன்மையை மாற்றி கூறுவது போன்ற திட்டமிட்ட வரி ஏமாற்றங்களுக்கு அந்த நபர் செலுத்த வேண்டிய வரியில் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என கூறியிருக்கிறார்.
புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வருவதால் எளிமையாக்கப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியிருக்கிறார். வழக்கமாக வருமானவரி கணக்கினை தாக்கல் செய்தவர்கள் தங்களுடைய திருத்தி அமைக்கப்பட்ட வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள். இதனை மார்ச் 31ஆம் தேதி வரை நீடித்திருக்கிறார். இதற்கு ஒரு கணிசமான கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் அது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
புதிய வருமான வரி சட்டத்தின் படி தாமதமாக வருமானவரி கணக்கினை தாக்கல் செய்தாலும் டிடிஎஸ் எனப்படும் மூலத்தில் கழிக்கப்படும் வரி பணத்தை திரும்ப கோர முடியும் என கூறியிருக்கிறார், சம்பளதாரர்கள், காலக்கெடுவை தவறவிட்டவர்கள், சம்பளத்தில் அதிகமாக டிடிஎஸ் பிடித்தம் செய்தவர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்.
மேல் முறையீட்டு அமைப்பிடம் உங்களுடைய வருமான வரி கணக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனை நிலுவையில் இருக்கும் காலத்திற்கு வரி செலுத்துவோருக்கு அபராத தொகைகளுக்கு வட்டி வசூலிக்கபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மாணவர்கள் , டெக் நிபுணர்கள் மற்றும் வேறு இடங்களுக்கு மாறிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுடைய வெளிநாட்டு சொத்துக்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை தாக்கல் செய்வதற்கு சிறப்பு ஆறு மாத காலம் வழங்கப்படுகிறது. முன்பு வெளிநாட்டு சொத்துக்களை கணக்கு காட்ட தவற விட்டிருந்தால் கூட தற்போது தாக்கல் செய்யலாம்.
வெளிநாட்டு படிப்பு மற்றும் மருத்துவ நோக்கங்களுக்கான கட்டணங்களுக்கு எல்ஆர்எஸ் திட்டத்தின் கீழ் பிடிக்கப்படும் டிசிஎஸ் எனப்படும் வரி விகிதம் 5%இல் இருந்து 2% குறைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications