2025ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதம் தான் முடிந்துள்ளது. அதற்குள் டெக் நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடங்கிவிட்டன. அமெரிக்காவை சேர்ந்த டெக் நிறுவனங்கள் இந்த புது ஆண்டிலும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த சேலஞ்சர் என்ற நிறுவனம், கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ஜனவரியில் தான் அமெரிக்க நிறுவனங்கள் அதிகமானவர்களை வேலையை விட்டு நீக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்படி டெக் நிறுவனங்கள் ஜனவரி மாதம் 49, 795 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது, இது டிசம்பரை விட 28 சதவீதம் அதிகமாகும். கடந்த டிசம்பரில் இந்த எண்ண்ணிக்கை 38,792 என இருந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 82307 என இருந்தது. எனவே கடந்த ஆண்டுடன் போது இது குறைவு. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மைக்ரோசாப்ட், அமேசான், மெடா, கூகுள், வொர்க் டே ஆகிய முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி விட்டன.
அமெரிக்காவை சேர்ந்த ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் வட கரோலினாவில் இருக்கும் அலுவலகத்தை மூடிவிட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை வால்மார்ட் நிறுவன மூத்த அதிகாரி டோனா மோரி்ஸ் ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்.
வொர்க் டே நிறுவனம் 1750 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே ஊழியர்கள் பணி நீக்கத்துக்கு காரணம் என வொர்க் டே நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் தகவல் தொடர்பு பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. சிக்கன நடவடிக்கையாக ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை எடுப்பதாக விளக்கம் தந்துள்ளது.
அதே போல மைக்ரோசாப்ட் நிறுவனம் ஊழியர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு பணிநீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனம் எதிர்பார்த்த தரத்துக்கு ஏற்ப செயல்திறனை காட்டாத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. ஊழியர்கள் பலருக்கும் இது தொடர்பாக மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் தங்கள் நிறுவன ஊழியர்களில் ஐந்து சதவீதம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி கிட்டதட்ட 3600 பேர் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த செயல் திறன் கொண்ட ஊழியர்களே பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர் என மெட்டா நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே இருந்தாலும் நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் புதிதாக 3.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications