மக்கள் மத்தியில் உயில் எழுதுவது குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. அதிக சொத்துள்ள ஒருவர் உயிர் எழுதாமல் இறக்கும் பட்சத்தில் அவருடைய குடும்பம் கடுமையான சட்ட நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியதாகிறது. குறிப்பாக பேங்க் டெபாசிட், காப்பீடு மற்றும் இதர சொத்துக்களை வைத்திருக்கும் ஒருவர் உயில் எழுதாமல் இறந்து விட்டால் அவருடைய குடும்பத்தார் மத்தியில் பெரிய பூகம்பமே வெடிக்கத் தொடங்கி விடும்.
உயில் எழுதுவது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் கிடையாது. எளிதில் இதை செய்ய முடியும். அதுவும் இன்றைய டிஜிட்டல் உலகில் நிறைய ஆன்லைன் தளங்கள் வந்துவிட்டன. Yellow, Aasan Will, KustodianLife மற்றும் No Grey போன்ற இணையதளங்கள் உயில் எழுதுவதை எளிதாக்கி வருகின்றன. இந்தச் சேவைகள் எவ்வாறு செயல்படுகின்றன? அதை பெறுவதற்கு நாம் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? இதற்கு வரம்பு இருக்கிறதா? நம் தேவைகளுக்கெல்லாம் ஏற்றதாக இருக்குமா? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆன்லைனில் உயில் எழுதுவது எப்படி?: இன்றெல்லாம் பெரும்பாலான ஆன்லைன் தளங்கள் குறைந்த செலவில் நீங்களே உயில் தயாரிக்கும் சேவையை வழங்குகின்றன. இதில் பயனர்கள் தங்களுடைய பெயர், முகவரி, குடும்ப விவரங்கள், அவரை சார்ந்து இருப்பவர்களின் விவரங்கள், சொத்து விவரங்கள், சொத்தை யார் யாருக்கெல்லாம் பகிர்ந்து வழங்க வேண்டும் மற்றும் சாட்சிகள் பற்றிய முக்கிய தகவல்களை வழங்க வேண்டும்.
நீங்கள் வழங்கிய விபரங்களின் அடிப்படையில் இந்தத் தளம் உங்களுக்கு உயிலை தயார் செய்து PDF ஃபார்மெட்டில் வழங்கி விடும். நீங்கள் அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். உயிலை எழுதுபவர் 2 சாட்சிகளின் முன்னிலையில் அதில் கையெழுத்து போட வேண்டும். சாட்சிகளும் அந்த உயிலில் கையெழுத்து போட வேண்டும். டிஜிட்டல் முறையில் போடப்படும் கையெழுத்து சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாது.
சொத்து தொடர்பான தகவல்களைச் சரியாக வழங்கினால் இந்த மெத்தடை பயன்படுத்தி எளிதில் உயில் எழுதலாம். ஆனால் பின்வரும் சிக்கலான சூழல் ஏற்படும் போது அதற்கு கண்டிப்பாக சட்ட வல்லுநர்களின் உதவியைப் பெற வேண்டும். நிறைய சொத்துக்கள் இருந்து அதைப் பிரிப்பதில் சிக்கல்கள் இருந்தால் ஒரு அட்வகேட்டை அணுகுவது நல்லது. விவாகரத்து அல்லது மறுமணம் நடந்த குடும்பங்களில் பிரிக்கப்படும் சொத்துக்களுக்கும் இது பொருந்தும்.
ஒரு சில தளங்கள் சட்ட ஆலோசகரை பார்ப்பது முதல் உயிலை பதிவு செய்வது வரை அனைத்து சேவையையும் சேர்த்து வழங்குகின்றன. இது போன்ற தளங்களை பயன்படுத்தியும் நீங்கள் உயில் எழுதலாம்.
ஆன்லைனில் உயில் தயாரிக்க கட்டணம் எவ்வளவு?: "Yellow" என்ற இணையதளம் மூன்று பிளான்களை வழங்குகிறது. பேசிக் பிளான், ப்ரீமியம் பிளான், ஓவரால் பிளான். இதில் பேசிக் பிளானுக்கு கட்டணமாக ரூ. 2,499 விதிக்கப்படுகிறது. ப்ரீமியம் பிளான் என்றால் ரூ.5499 செலுத்த வேண்டும். இதைத்தவிர உயில் எழுதி அதை பதிவு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஓவரால் பிளானை தேர்வு செய்யலாம். இதற்கு ரூ.15,000 செலுத்த வேண்டும்.
KustodianLife என்ற நிறுவனம் ஒரு முழுமையான உயிலுக்கு ரூ.12,500 கட்டணம் வசூலிக்கிறது. மேலும் அதை பதிவு செய்வதற்கு கூடுதலாக ரூ.8,000 முதல் ரூ.15,000 வரை செலவு செய்ய வேண்டும். தற்போது இந்தத் தளத்தில் புதிதாக ரூ.499 என்ற விலையில் நீங்களே உயில் தயாரித்துக் கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Aasan Will என்ற ஆன்லைன் நிறுவனம் நீங்களே சுயமாக உயில் எழுதும் ஆப்ஷனை வழங்கவில்லை. இங்கு பேசிக் பிளான் ரூ.4,999 முதல் தொடங்குகிறது. இதில் பதிவு கட்டணம் போன்றவை அடங்காது. நீங்கள் முழு சேவையையும் பெற விரும்பினால் அதற்கு ரூ.30,000 செலவு செய்ய வேண்டும்.
ஒரு சிலர் கட்டணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தளத்தை தேர்வு செய்து விடுகின்றனர். அப்படி செய்யாமல் சட்ட ஆலோசகரின் தேவை மற்றும் பிறக் கட்டணங்களை ஒப்பிட்டு பார்த்து தீர்மானிக்க வேண்டும்.
உயிலைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?: உயிலைச் சட்டப்பூர்வமாக செல்லுபடியாக வைக்க அரசு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. இருந்தாலும் எதிர்காலத்தில் எந்தச் சட்ட சிக்கலும் வராமல் இருக்க பதிவு செய்வது நல்லது. உயிலை பதிவு செய்ய அரசு விதிக்கும் கட்டணம் மிக மிக குறைவு. 100 ரூபாய் இருந்தாலே போதும். ஸ்கேனிங் கட்டணமாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 முதல் 40 ரூபாய் வரை செலவாகும். ஸ்டாம்ப் டியூட்டியும் உயிலுக்கு கிடையாது.


Click it and Unblock the Notifications
