குஜராத்: இந்தியாவில் பணக்கார நபர் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்களில் கௌதம் அதானியும் ஒருவர். கௌதம் அதானி இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 6, 77,520 கோடி ரூபாயாகும். ஆசியாவிலேயே மிக முக்கியமான பணக்காரராகவும் கௌதம் அதானி கருதப்படுகிறார்.
கௌதம் அதானியின் குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பே கிட்டத்தட்ட 16 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதுபோல மிகப்பெரிய ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கு கௌதம் அதானிக்கு உறுதுணையாக இருந்தவர் அவரது குழந்தை பருவ நண்பர்.

மலாய் மகாதேவியா – அதானி குழும தலைவரான கௌதம் அதானியின் வலது கை என பரவலாக அறியப்படுகிறார். கௌதம் அதானியும், மலாய் மகாதேவியாவும் சிறு வயது நண்பர்கள். பின்னாளில் மலாய் மகாதேவியா பல் மருத்துவம் படிக்க சென்றுவிட்டார்.
அதானி தொழில் துறையில் கால்பதித்துவிட்டார். ஆனால் சில ஆண்டுகளிலேயே மலாய் மகாதேவியாவை தன்னுடைய தொழிலில் இணைத்து கொண்டார் அதானி.
தற்போது கௌதம் வலது கையாக செயல்படக்கூடிய மலாய் மகாதேவியா, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குனராக செயல்பட்டு வருகிறார். மேலும் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
இவர் தற்போது அதானி குழுமத்தின் துறைமுகங்கள், லாஜிஸ்டிக்ஸ், ஹெல்த் கேர், உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை, சமூகப் பொறுப்பு நடவடிக்கைகள் ஆகிய பிரிவுகளில் முக்கிய அங்கமாக செயல்பட்டு வருகிறார்.
அதானி நிறுவன அறக்கட்டளையில் இவரும் ஒரு டிரஸ்டியாக இருந்து வருகிறார். மலாய் மகாதேவியா அகமதாபாத் அரசு பல் மருத்துவமனையில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் பல் அறுவை சிகிச்சை துறையில் மேற்படிப்பை முடித்துள்ளார்.

மேலும் குஜராத் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்துள்ளார். 1992 ஆம் ஆண்டு அதானி குடும்பத்தில் இவர் இணைந்தார். அதானி நிறுவனம் முந்த்ராவில் துறைமுகத்தை கொண்டு வந்ததில் முக்கிய பணியாற்றியுள்ளார்.
மத்திய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையம், ஃபிக்கி, அசோசேம், குஜராத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆகிய முக்கியமான அமைப்புகளில் எல்லாம் இவர் அங்கம் வகித்து வருகிறார். கௌதம் அதானியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்களில் மனைவி ப்ரீத்தி அதானிக்கு பிறகு , நண்பர் மலாய் மகாதேவியாவும் முக்கியமானவர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications