சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் HMPV வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் பரவ துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியான தகவல்படி சீனாவுக்கு அடுத்ததாக மலேசியாவில் ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) பாதிப்பு 2024 ஆம் ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகிறது.
இந்த ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) 2001 ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் சுற்றி வந்தாலும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே தொற்று எண்ணிக்கையும் அளவும் இருந்தது. ஆனால் தற்போது சீனாவில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து உலக நாடுகளில் மீண்டும் கொரோனா போல் லாக்டவுன் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மலேசியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டு 45% அதிகரித்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது. சீனாவில் சுவாச நோய்கள் கடுமையாக அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வெளியாகி வரும் நிலையில், மலேசியாவில் அதுக்குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின்படி, மலேசிய சுகாதார அமைச்சகம் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கவும், சுவாச நோய்களின் பரவலைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
கடுமையான வானிலையின் போது சுவாச நோய்கள் அதிகம் பரவுகின்றன, எனவே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுத்தியுள்ளது மலேசிய சுகாதார அமைச்சகம். 2024 ஆம் ஆண்டில் 327 புதிய HMPV நோய்த்தொற்றுகளை பதிவு செய்துள்ளது, இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 225 நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது 45 சதவீதம் அதிகமாகும்.
HMPV என்பது நியூமோவிரிடே (Pneumoviridae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சுவாச வைரஸாகும், இதில் respiratory syncytial virus (RSV) அடங்கும். இந்த வைரஸ் மேல் மற்றும் கீழ் சுவாசக் குழாயை பாதித்து, காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. தீவிரமான நோய்த்தொற்றுகளில், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா அல்லது COPD போன்ற பாதிப்புகள் உள்ள நபர்களுக்கு HMPV வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் HMPV வைரஸ் பாதிக்ப்பட்டவர்களுக்கு மூச்சுக்குழாயின் அழற்சியை அல்லது நிமோனியாவை ஏற்படுத்தும்.
மலேசிய சுகாதார அமைச்சகம் எந்தவொரு குறிப்பிட்ட எச்சரிக்கைகளையும் அல்லது அறிவுரைகளையும் வெளியிடவில்லை என்றாலும், சுவாச நோய்களின் பரவலைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
HMPV என்பது புதிதாக கண்டறியப்பட்ட வைரஸ் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது 2001 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது, பல வருடங்களாக் மக்கள் மத்தியில் சுற்றி வருகிறது. இருப்பினும், மலேசியாவில் சமீபத்தில் நோய்த்தொற்றுகள் அதிகரித்திருப்பதும் சீனாவில் தொற்றுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வெளியாகியிருப்பதும் கூடுதல் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications