மாலத்தீவு: சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற நாடான மாலத்தீவு, இஸ்ரேல் குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது. இது இஸ்ரேல் அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மாலத்தீவில் நுழைய தடை விதிப்பதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து மாலத்தீவு அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதையும் மீறி இங்குள்ள இஸ்ரேலியர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவர்களுக்கு அரசு உதவி செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசானது மாலத்தீவில் உள்ள இஸ்ரேலியர்கள் உடனே நாடு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுலாவுக்கு பெயர் போன மாலத்தீவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் சூழலில் இந்த அறிவிப்பானது அதன் பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாலத்தீவு எடுத்துள்ளது.
ஏற்கனவே, இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை தீவிரமாக நடந்து வந்த 1990களில் மாலத்தீவில் இஸ்ரேலியர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. பின் 2010இல் அதனை நீக்கி இஸ்ரேலுடன் அரசாங்க உறவுகளை மீண்டும் மாலத்தீவு புதுப்பித்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே இஸ்ரேல் – பாலஸ்தீனம் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 36,439 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே 27ஆம் தேதி பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.சமூகவலைதளங்களிலும் பலரும் இஸ்ரேலுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக காஸாவில் மிக தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே இருக்கின்றன. இந்த தாக்குதல்களால், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய மாலத்தீவு மக்கள் இஸ்ரேல் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அழுத்தம் தந்தன. எனவே தான் மாலத்தீவு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மாலத்தீவுக்கு ஆண்டுதோறும் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர், இவர்களில் சுமார் 15,000 பேர் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications