பொதுவாக ஒரு பைக் அல்லது ஸ்கூட்டரை வாங்கியவுடன், அதற்கான அக்சஸரீஸ்களுக்கு சில ஆயிரங்கள் செலவழிப்பது வழக்கம். ஆனால் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், தனது ஸ்கூட்டருக்காக அடிப்படை தேவைகளைத் தாண்டி, பல லட்சங்கள் செலவழித்துள்ளார். இது சாதாரணமாக நாம் எதிர்பார்ப்பதற்கும் மீறியது. அவர் வாங்கியது ஒரு ஸ்கூட்டருக்கான பொருள் மட்டுமல்ல. அது ஒரு தனிப்பட்ட ஆசை, ஒரே நேரத்தில் ஆச்சரியம் மற்றும் ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.1 லட்சம் மட்டுமே. ஆனால் அதற்கான பதிவு எண்ணை, அதாவது 'வெறும் நம்பரை' சுமார் ரூ.14 லட்சம் செலவழித்து பெற்றுள்ளார் ஒரு நபர். ஸ்கூட்டரின் விலையை விட 14 மடங்கு அதிகம் கொடுத்து வாங்கப்பட்ட இந்த பதிவு எண், அவர் எண்ணில் கொள்ளும் தனிப்பட்ட விருப்பத்தையும், அதற்காக செலவிடும் தயக்கமற்ற மனப்பான்மையையும் காட்டுகிறது.

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் ஒருவரின் செயல் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்கூட்டரின் விலை வெறும் ₹1 லட்சம் தான். ஆனால் அதற்கு அவர் வாங்கிய நம்பர் பிளேட் விலை ₹14 லட்சம். இந்த நபர் சஞ்சீவ் குமார். இவர் சமீபத்தில் ஒரு புதிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். ஆனால் வாகனத்திற்கான சாதாரண பதிவு எண்ணுக்கு பதிலாக, தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நம்பரை பெற விரும்பினார்.
ரூ.14 லட்சத்திற்கு ஏலம் : இதன் காரணமாக, மாநில போக்குவரத்துத் துறை நடத்திய ஆன்லைன் ஏலத்தில், 'HP21C-0001' என்ற ஃபேன்ஸி எண் மீது ஏலம் போட்டார். போட்டியாளராக இருந்த இன்னொரு நபர் ₹13.5 லட்சம் வரை ஏலம் வைத்த நிலையில், சஞ்சீவ் ₹14 லட்சம் செலுத்தி அந்த எண்ணைப் பெற்றார். இந்த எண்ணுக்கு செலுத்திய முழுத் தொகையும் மாநில அரசுக்கே நேரடியாக வருவாயாக சென்றது.
மாநிலத்திலேயே இதுதான் முதல்முறை : அதிகாரிகளின் கூற்றுப்படி, "இது, ஒரு இருசக்கர வாகனத்திற்கு இம்மாநிலத்தில் கிடைத்த உயர்ந்த விலையுள்ள பதிவு எண்" என்று கூறியுள்ளனர்.
ஆர்வத்திற்கு விலை இல்லை : இதுகுறித்து சஞ்சீவ் குமார் கூறுகையில், "சிறப்பு மற்றும் தனித்துவம் கொண்ட எண்களை சேகரிப்பது எனது பொழுதுபோக்காக உள்ளது. எனவே, நான் வாங்கிய ஸ்கூட்டருக்கு இந்த எண்ணைப் பெற விலை உயர்ந்திருந்தாலும் தயங்கவில்லை. ஏதாவது சிறப்பான ஒன்றை வாங்க வேண்டும் என்று விரும்பினால், அதன் விலையை பற்றி யோசிக்கவோ, கவலைப்படவோ கூடாது. ஆர்வத்திற்கு எப்போதும் விலை இல்லை" எனத் தெரிவித்தார். அவருடைய மகன் தினேஷ் கூறுகையில், "நாங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தோம். ஒரே எண்ணுக்கு இன்னொரு நபரும் போட்டியிட்டார். இறுதியில் நாங்கள் அந்த எண்ணை வென்றோம்" என்றும் அவர் கூறினார்.
விமர்சனங்களும்.. பாராட்டுகளும்: சஞ்சீவ் குமார், ஹமீர்பூரில் இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு பெரிய கடையை நடத்தி வருகிறார். மட்டன் சித்து பகுதியைச் சேர்ந்த இவர், தொழில்முனைவோராகவும், பல ஆண்டுகளாக வியாபாரத்தில் நிலைத்து நின்றவராகவும் உள்ளார். இந்த விசித்திர சம்பவம், இணையதளங்களில் பல்வேறு விமர்சனங்களையும், பாராட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் இது ஒரு ஆடம்பரம் எனக் கூறினாலும், சிலர் அதை தனித்துவ ஆர்வத்தின் வெளிப்பாடு என்றும், ஈ-ஏல முறையின் வெற்றியை விளக்கும் எடுத்துக்காட்டு என்றும் பாராட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications