சமீப காலமாக தொடர்ந்து விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை தவறவிடுவது நடந்து கொண்டிருக்கிறது. விமான தாமதங்கள் மற்றும் ரத்துக்களும் பல பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து கவுகாத்திக்கு உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்த மோனிக் ஷர்மா என்ற நபர் தன்னுடைய லக்கேஜை இழந்துள்ளார். அந்த லக்கேஜின் மதிப்பு சுமார் 45,000 ரூபாய் என்று கூறப்படுகிறது. இதற்கு விமான நிறுவனம் இழப்பீடாக 2,450 ரூபாய் வழங்கியுள்ளது.
இந்நிலையில் மோனிக் ஷர்மாவின் நண்பர் ஒருவர் நடந்த விஷயம் குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். மேலும் காணாமல் போன ஷர்மாவின் லக்கேஜில் ரூ.45,000 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் அவரது ஓட்டுநர் உரிமம், பான், ஆதார் போன்ற முக்கிய ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த பதிவில், மோனிக் ஷர்மாவின் நண்பர் "கொல்கத்தா விமான நிலையத்தில் லக்கேஜ்கள் சோதனை செய்யப்பட்டன. ஆனால் கவுகாத்திக்கு அவை வரவில்லை. இது எப்படி விமானத்திலிருந்து காணாமல் போக முடியும்? ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு, இண்டிகோ நிறுவனம் ரூ.2,450 ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது. இது அபத்தமானது. வெறும் பைக்கு மட்டுமே அதற்கு அதிகமாக செலவாகும் என்று பதிவிட்டுள்ளார்.
இண்டிகோவின் அதிகாரப்பூர்வ ஐடியையும் டேக் செய்திருந்தார் மோனிக் சர்மாவின் நண்பர். அந்தப் பதிவில், சர்மாவின் போர்டிங் பாஸின் படமும் பகிரப்பட்டது. லக்கேஜ் மீட்கப்பட்டதா என்பது குறித்து விவரம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இண்டிகோவின் சமூக ஊடகக் குழு அவர்களைத் தொடர்பு கொண்டு மேலும் விசாரணைக்கு உறுதியளித்ததாக மோனிக் சர்மாவின் நண்பர் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்தனர். ஒரு பயனர், செக்-இன் லக்கேஜில் பணம், நகைகள் அல்லது முக்கியமான ஆவணங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை வைத்திருக்க கூடாது என விமான நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. இதற்கு நுகர்வோர் நீதிமன்றத்தால் கூட உதவ முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொரு பயனர் 2 விமான நிலையங்களிலும் தொலைந்து போனதைச் சரிபார்ப்பது அவசியம். யாரோ தவறுதலாக சாமான்களை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications