சிலி நாட்டில் உள்ள ஊழியர் ஒருவருக்கு தவறுதலாக 286 மடங்கு சம்பள பணம் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்த தொகையை பார்த்து ஆச்சரியம் அடைந்த அந்த ஊழியர் அந்தத் தொகையை திருப்பி நிறுவனத்திற்குக் கொடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
ஆனால் அடுத்த நாளே அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிலி ஊழியர்
சிலி நாட்டைச் சேர்ந்த Cial என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு மாத சம்பளம் ரூபாய் 43 ஆயிரம் என்ற நிலையில் மே மாதம் சம்பளம் தவறுதலாக ரூபாய் 1.42 கோடி நிறுவனம் அவரது வங்கி கணக்கில் செலுத்தியது.
கண்டுபிடிக்கப்பட்ட தவறு
இந்த நிலையில் நிறுவன நிர்வாகம் உடனே அந்த தவறை கண்டுபிடித்து உடனடியாக அந்த ஊழியரிடம் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி அளிக்கும்படி கோரிக்கை விடுத்தது. ஊழியரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
286 மடங்கு அதிகம்
தனது மாத சம்பளத்தை விட 286 மடங்கு ஊதியம் அதிகம் பெற்றதை வங்கி கணக்கை சரிபார்த்த பின்னர் உணர்ந்த அந்த ஊழியர் வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்துக்கொண்டு நிறுவனத்திற்கு வந்து ஒப்படைப்பதாக கூறி இருந்தார்.
காத்திருப்பு
286 மடங்கு அதிகம் சம்பளம் பெற்ற ஊழியர் பொறுப்பாக வங்கிக்கு சென்று கூடுதலான பணத்தை எடுத்து அலுவலகத்தில் ஒப்படைத்துவிடுவார் என்று நிறுவன ஊழியர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
ராஜினாமா-தலைமறைவு
ஆனால் காத்திருந்த நிறுவன நிர்வாகத்திற்கு அதிர்ச்சி தரும் வகையில் திடீரென அந்த ஊழியர் தலைமறைவாகி விட்டதாகவும் ஜூன் இரண்டாம் தேதி அவர் தனது ராஜினாமா கடிதத்தை நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்ட நடவடிக்கை
இதனால் அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அந்த ஊழியரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதனை அடுத்து பணத்தை மீட்பதற்காக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க நிறுவனத்தின் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications