இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான், பிளிப்கார்ட் ஆதிக்கத்தை உடைக்க பல முயற்சிகளை செய்து வரும் வேளையில் ஒரு மூத்த அதிகாரியை இழக்கிறது. அமேசான் இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் இருந்த மனீஷ் திவாரி 8 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனத்தின் இருந்து வெளியேறும் மனீஷ் திவாரி, மற்றொரு நிறுவனத்தில் புதிய பதவியை ஏற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசான் இந்தியாவில் மனீஷ் திவாரி கன்ஸ்யூமர் பிஸ்னஸ் மற்றும் செல்லர் சர்வீசஸ் ஆகியவற்றைக் கவனித்து வந்தார். இது இரண்டும் அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை ஈர்க்க முக்கிய காரணமாக இருந்தது.

மனீஷ் திவாரி பல ஆண்டுகளாகப் பிரபல FMCG நிறுவனமான யுனிலீவர் நிறுவனத்தில் பணிபுரிந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு அமேசான் இந்தியாவில் இணைந்தார். இந்த நிலையில் மனீஷ் திவாரி அடுத்து எந்த நிறுவனத்தில் சேரப்போகிறார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகத்தை ஆப்லைன் மற்றும் ஆன்லைனில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய தீவிரமாக உள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் போட்டி நிறுவனங்களில் இருந்து மூத்த அதிகாரிகளை ஈர்க்கும் பணியில் தீவிரமாகவும் இருக்கும் வேளையில் மனீஷ் திவாரி ரிலையன்ஸ் ரீடைல் பிரிவிலும் சேர வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் ரிலையன்ஸ் தனது ஜியோ சினிமா சேவையை பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும் என்பதற்காக யூடியூப் இந்தியா தலைவரை பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் "அமேசான் இந்தியாவின் கன்ட்ரி மேனேஜரான மனீஷ் திவாரி, நிறுவனத்திற்கு வெளியே புதியதொரு ஒரு வாய்ப்பைத் தொடர முடிவு செய்துள்ளார். வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதில் கடந்த எட்டு வருடங்களாக மனீஷ் திவாரி-யின் தலைமைத்துவம் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதன் மூலம், அமேசான்.இன் இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்கச் சந்தையாக மாற உதவியுள்ளது." என்று தெரிவித்தார்.
மனீஷ் திவாரி தனது பொறுப்புகளையும், பணிகளையும் அடுத்த தலைவரிடம் ஒப்படைக்கவும், நிர்வாக மாற்றம் எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அக்டோபர் மாதம் வரை அமேசான் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளார் மனீஷ் திவாரி.


Click it and Unblock the Notifications