டெல்லி: தற்போது இந்தியாவில் குறிப்பிட்ட சில மருந்து நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் மேன் கைன்ட் பார்மா (Mankind Pharma). 1995ஆம் ஆண்டு ஜுனேஜா சகோதரர்களால் தொடங்கப்பட்டது தான் இந்த மருந்து நிறுவனம்.
ரமேஷ் ஜூனேஜா மற்றும் அவரது சகோதர ராஜீவ் ஜூனேஜா ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய மேன் கைன்டு பார்மா நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு 95,876 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவின் நான்காவது பெரிய மருந்து நிறுவனமாக மேன் கைன்டு பார்மா செயல்பட்டு வருகிறது.

ரமேஷ் ஜூனேஜா இதன் தலைவராகவும் முழு நேர இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்து துறையில் பணி அனுபவம் இருக்கிறது. இவரது சகோதரரான ராஜீவ் ஜூனேஜா, நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு மருந்து துறையில் 29 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்கிறது.
69 வயதாகக் கூடிய ரமேஷ் ஜூனஜா தான் நிறுவனத்தில் விற்பனையாகும் அனைத்து மருந்துகளுக்கும் பிராண்ட் பெயர்களை நிர்ணயம் செய்பவர். உத்திரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர்கள் தான் ஜுனேஜா சகோதரர்கள். இவர்களில் மூத்தவரான ரமேஷ் ஜூனேஜாவுக்கும் சகோதரர் ராஜீவ் ஜூனேஜாவுக்கும் இடையே 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கிறது. மூத்தவரான ரமேஷ் ஜூனேஜா தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு ஆரம்ப கட்டத்தில் ஒரு மருந்து நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றினார்.
ராஜீவ் ஜூனேஜா ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தவர். இந்த துறையில் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இருவரும் மேன் கைன்டு பார்மா என்ற மருந்து நிறுவனத்தை தொடங்கினர். ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ரமேஷ் ஜூனேஜாவின் சொத்து மதிப்பு 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அதேவேளையில் ராஜுவ் ஜூனேஜாவின் சொத்து மதிப்பு 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இவர்கள் 1995ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் 20 ஊழியர்களுடன் தான் மேன் கைன்டு பார்மா நிறுவனத்தை தொடங்கினர். முதலில் இரண்டு மாநிலங்களில் மட்டுமே இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்டிபயாட்டிக், இதயம், தோல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கான மருந்தை விற்பனை செய்கிறது.
கடந்த ஆண்டு ஐபிஓ வெளியீடு செய்தது முதல் தற்போது வரை இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 74% உயர்ந்துள்ளது. 2024 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 10,335 கோடியாகவும் லாபம் 1,942 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications