இந்தியாவின் முன்னாள் பிரதமர், பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் உடல்நிலை மோசமடைந்தது இன்று இரவு 8 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவச் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.
மன்மோகன் சிங் மறைவு குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர் ரிமா தாதா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், 92 வயதில் மறைந்ததை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வயது முதிர்வு தொடர்பான சில மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்று வந்தார், இந்நிலையில் டிசம்பர் 26, 2024 அன்று வீட்டில் திடீரென மயக்கம் அடைந்து நினைவை இழந்தார். வீட்டிலேயே முதலுதவி, முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மாலை 8:06 மணிக்கு AIIMS, டெல்லி மருத்துவ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அனைத்து முயற்சிகளும் செய்தபோதும் அவரை மீட்டெடுக்க முடியவில்லை. மாலை 9:51 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டாக்டர் மன்மோகன் சிங் செப்டம்பர் 26, 1932 இல் பிரிட்டிஷ் இந்தியாவில் (இப்போது பாகிஸ்தானில் உள்ளது) காவில் பிறந்தார். பள்ளி பருவத்தில் இருந்தே படிப்பில் படுகெட்டியாக இருந்த அவர் பல்வேறு சாதனைகளைச் செய்தார். அவர் தனது கல்லூரி படிப்பைப் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தொடங்கினார், அங்கு அவர் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார், பொருளாதாரத் துறையில் அவர் முக்கியத்துவம் பெறுவதற்கான அடித்தளத்தை இக்கல்லூரியில் தான் அமைத்தார்.
அவரது கல்வி சாதனைகள் மற்றும் ஆற்றல் அவரை வெளிநாட்டில் கல்வியைத் தொடர பாதை வகுத்தது. வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற மன்மோகன் சிங்கின் ஆர்வம் அவரை பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றும் வரையில் கொண்டு சென்றது.
இந்தியா திரும்பிய பிறகு, பஞ்சாப் பல்கலைக்கழகம், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் போன்ற பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் கற்பிக்கும் பேராசிரியராகத் தனது கல்வி வாழ்க்கையைத் தொடங்கினார். பொருளாதாரத்தில் அவர் செய்த சாதனைகள், ஆராய்ச்சிகள், ஆய்வுகள் அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத்தந்தது.
இந்த பயணம் அவருக்கு முதன் முதலில் 1970களில் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் பதவியைப் பெற உதவியது. இது தான் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியைப் போட்டது. இதன் பின்பு இந்திய பொருளாதாரத்தின் மிக முக்கியமான நிதியமைச்சராகவும், இரண்டு முறை நாட்டின் பிரதமராக பதிவி வகித்தார்.


Click it and Unblock the Notifications