தற்போதை நவீன காலகட்டத்தில் மளிகைப் பொருட்கள் தேவைப்பட்டால், கடைக்குப் போகாமல் மொபைலில் ஆர்டர் செய்தால் போதும். Blinkit, Instamart, Zepto போன்ற செயலிகள், நம் வீட்டிற்கு மிக விரைவாகப் பொருட்களைக் கொண்டு வந்து சேர்க்கும் உயிர் காக்கும் நண்பர்களாக மாறிவிட்டன. ஆனால், இந்த வசதி சிலரை அளவுக்கு அதிகமாக செலவு செய்ய தூண்டுகிறது என்பதற்கு சமீபத்திய சம்பவம் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது.
'Aceternity UI' என்ற நிறுவனத்தின் நிறுவனரான மனு அரோரா என்பவர், தனது Blinkit செலவு விவரங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர், வெறும் 60 நாட்களில் Blinkit செயலியில் ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் மேல் செலவழித்துள்ளார். இதில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரூ. 3.17 லட்சம் செலவாகியுள்ளது. இந்த ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, "எனக்கு இந்த Blinkit-ஐ பிடிக்கவில்லை" என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

பணம் எங்கே போனது..?: இவ்வளவு பெரிய தொகையை எதற்காக செலவழித்தீர்கள் என்று சமூக வலைதளப் பயனர்கள் கேட்டபோது, அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தை அளித்தது. "பெரும்பாலான பணம் எதற்கு கொடுக்கப்பட்டது?" என்ற கேள்விக்குப் பதிலளித்த மனு அரோரா, "சிப்ஸ் (Chips) வாங்கத்தான்" என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தப் பழக்கம் குறித்து வருத்தத்துடன் பேசிய அவர், "இவ்வளவு பணத்தை வீணாக செலவழிக்கும் நான் ஒரு முட்டாள். என்ன வாங்குனேன் என்று எனக்கே தெரியவில்லை. இது ஒரு விதமான அடிமைத்தனம் என்று நினைக்கிறேன்" என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மனு அரோராவின் இந்த செலவு வைரலான நிலையில், மற்றொரு பயனர் தனது அதிரவைக்கும் செலவுப் பழக்கத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்கிரீன்ஷாட்டில், அவர் மார்ச் மாதம் முதல் சராசரியாக மாதந்தோறும் ரூ. 3 லட்சம் செலவழித்து வருவதாகவும், அக்டோபரில் மட்டும் அவரது செலவு ரூ. 6 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆபத்தான பழக்கம் ஏன்..?: இந்த அதிவிரைவு டெலிவரி செயலிகள் வந்த பிறகு, நம்மில் பலருக்கு உடனடியாக வாங்கும் பழக்கம் (Impulsive Buying) அதிகமாகிவிட்டது. ஏதாவது தேவை என்றால், யோசிக்காமல் உடனே ஆர்டர் செய்துவிடுகிறோம். இதுதான் அதிக செலவுக்கு காரணம். 'டேட்டம் இன்டெலிஜென்ஸ்' என்ற ஆய்வு நிறுவனம் இதை உறுதிப்படுத்துகிறது.
ஆன்லைனில் மளிகை வாங்கும் ஆட்களில் 75% பேர், கடந்த 6 மாதங்களில் தாங்கள் திட்டமிடாத பொருட்களை அதிகமாக வாங்கியுள்ளனர். அவர்களுடைய ஒரு ஆர்டரின் சராசரி மதிப்பு ரூ. 400-ஐ தாண்டிவிட்டது.
மேலும், மக்கள் தங்கள் மளிகை தேவைகளுக்கு, அருகில் உள்ள உள்ளூர் கடைகளுக்கு செல்வதைக் குறைத்துக்கொண்டு, இந்த அதிவிரைவு டெலிவரி தளங்களை மட்டுமே நம்பி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த செயலிகள் நம் வாழ்க்கையை எளிமையாக்கினாலும், நமது பணப் பழக்கவழக்கங்களை மோசமாக பாதித்து வருகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications