இந்தியாவை சேர்ந்த 40 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வருமான ஆதாரங்களைக் கொண்டிருப்பது ஒரு ஆய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. சர்வதேச பேரோல் நிறுவனமான ஏடிபி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (ADP Research Institute ) 18 நாடுகளை சேர்ந்த பணியாளர்களிடம் ஆய்வு நடத்தி அந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
People at Work 2024: A Global Workforce View என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் வேலைக்கு செல்பவர்கள் மாதம் சம்பளம் மட்டும் இல்லாமல் கூடுதல் வருமான ஆதாரங்களை ஏற்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டும் போக்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சௌகரியமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவும் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காகவும் தங்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மாற்று வருமான ஆதாரங்களை நாடுகிறார்களாம்.
18 நாடுகளை சேர்ந்த 34,612 ஊழியர்களிடம் இவர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 24 வரை இந்த ஆய்வு நடைபெற்றது. இதன் அடிப்படையில் இந்த நிறுவனமானது அறிக்கையை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி இந்தியாவை சேர்ந்தவர்களில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பேர் தங்களுடைய ஊதியம் தங்களுக்கு போதுமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது கடந்தாண்டு அறிக்கையில் வெறும் 49 சதவீதமாக இருந்து தற்போது 73 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்திய ஊழியர்களை பொறுத்தவரை ஊதியம் தான் அவர்கள் செய்யக்கூடிய வேலையை தீர்மானிக்கிறது என 55 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு நடத்தப்பட்ட 18 நாடுகளிலேயே இந்தியாவில் உள்ளவர்கள் தான் அதிகபட்சமாக தங்களது வேலை திருப்திகரமாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெண் பணியாளர்கள் 84% தங்களுடைய வேலை திருப்தியாக உள்ளது என்றும் ஆண்களில் 78 % பேர் வேலை திருப்தியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்களாம்.
கல்வித்துறை சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் வேலை தங்களுக்கு பெரிய அளவில் திருப்தி தருகிறது எனக் கூறியுள்ளார்களாம். அதே வேளையில் இந்த ஆய்வறிக்கை வேறு சில குறிப்பிட்ட விஷயங்களையும் முன்வைக்கிறது. பொதுவாக வேலைக்கு செல்பவர்களுக்கு அந்த வேலையில் இருந்து எவ்வளவு ஊதியம் கிடைக்கிறது என்பதுதான் முன்னுரிமையாக இருக்கிறது.
இரண்டாவது பணவீக்கத்தின் அடிப்படையில் தங்களது ஊதியம் ஆண்டுதோறும் உயர வேண்டும் என நினைக்கிறார்கள். மூன்றாவதாக செயற்கை நுண்ணறிவால் தங்களது வேலை பறிபோக கூடுமோ என்ற அச்சம் பெரும்பாலான ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது.
அடுத்ததாக வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்ற ஒரு கருத்தையும் முன் வைத்துள்ளார்களாம். மன அழுத்தம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications