மும்பை: மிக அரிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதியுடன் நிதியாண்டு முடிவடைகிறது. எனவே வங்கிகள், வருமான வரித்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் நிதி சார்ந்த பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மார்ச் 31ஆம் தேதியான நிதியாண்டின் கடைசி நாளில் வங்கிகள் செயல்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே வங்கிகள் செயல்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த சூழலில், மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு பரிவர்த்தனைகளை கையாளும் அனைத்து ஏஜென்சிகள் மற்றும் வங்கிகளுக்கும் மார்ச் 31ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2023 - 24ஆம் நிதியாண்டில் நடைபெற்ற அனைத்து அரசாங்க பரிவர்த்தனைகளுக்கும் ரசீது அல்லது பணப்பரிவர்த்தனைகள் மூலம் கணக்கு வைப்பதற்காக மார்ச் 31ஆம் தேதி அன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வங்கி செயல்படும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
நிலுவையில் உள்ள வரி தொடர்பான பணிகளை கருத்தில் கொண்டு மார்ச் 29 முதல் 31 வரையிலான நீண்ட வார விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. வழக்கம் போல வருமான வரி அலுவலகங்கள் அனைத்தும் மார்ச் 29 ,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பெயரில் மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் செயல்பட்டாலும் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு சம்பந்தப்பட்ட ரசீதுகளை சரி செய்வதற்கான பணிகளில் தான் ஈடுபடும் என தெரிய வந்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications