மும்பை: 2023-24ஆம் நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் நிதியாண்டின் இறுதி நாளில் வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள் வழக்கம் போல செய்யப்படும்.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மார்ச் 31ஆம் தேதி வழக்கம் போல வங்கிகள் செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

குறிப்பாக வருமான வரி துறை சார்ந்த செயல்கள் மற்றும் அரசின் ரசீதுகளை கிளியர் செய்வது போன்ற பணிகளுக்காக வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி டிபிஎஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பந்தன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் வழக்கம் போல செயல்பட உள்ளன.
12 பொதுத்துறை வங்கிகள், 20 தனியார் வங்கிகள் மற்றும் ஒரு வெளிநாட்டு வங்கி ஆகியவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும் பொதுமக்கள் தங்களது வழக்கமான வங்கிப் பணிகளை மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் சேவை குறித்து வங்கிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த விளக்கமும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தன் வங்கி மட்டும் தங்களுடைய வங்கிகள் 31ஆம் தேதி வழக்கம் போல செயல்படும் என கூறியதாக எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தனி நபர்கள் வருமான வரி சம்பந்தமான சலான்கள் ஆகியவற்றை செலுத்துவதற்கு வங்கிக்கு வருகை தரலாம் என்றும் அதேபோல வருமான வரி சேமிப்புக்கு உதவக்கூடிய டெபாசிட் திட்டங்கள் மற்றும் ppf திட்டங்களில் பங்களிப்பு தருவதற்காக வாடிக்கையாளர்கள் வருகை தரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் அரசு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வசதியாக அனைத்து வங்கிகளும் மார்ச் 31 ஆம் தேதி செயல்படும் என தெரிவித்துள்ளது. அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த சுற்றறிக்கை வெளியிடுவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதாவது அரசு சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள வங்கிகள் செயல்படும் என தெரிவித்தது. இதனை அடுத்து மார்ச் 22ஆம் தேதி ஆர்பிஐ வெளியிட்ட செய்தி குறிப்பில் எலக்ட்ரானிக் எனப்படும் மின்னணு பரிமாற்றங்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல செயல்படும் என்று தெரிவித்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும் பெரும்பாலும் பொதுமக்கள் அன்றைய தினம் சேவைகளை பெறமுடியாது என்றே தெரிகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications