2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஆப்பிள், டெல், ஐபிஎம் மற்றும் பிற பிரதான தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோல ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் மார்ச் மாதத்தில் ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஐந்து பெரிய நிறுவனங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

எரிக்சன்: ஸ்வீடனை சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எரிக்சன் சுமார் 1,200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அங்கே 5ஜி நெட்வொர்க் தேவை என்பது குறைந்து வரும் சூழலில் நிறுவனத்தை சீரமைக்கும் நோக்கில் எரிக்சன் இந்த முடிவினை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் எரிக்சன் நிறுவனத்தில் வேலை செய்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1 லட்சமாகும். கடந்தாண்டில் இவர்களில் 8,500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் இந்த நிலையில் தற்போது கூடுதலாக 1200 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
டெல் டெக்னாலஜிஸ்: சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல் நிறுவனமும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் டெல் நிறுவன கணிணி விற்பனை குறைந்து அதன் வருவாய் 11% சரிந்தது.
ஆப்பிள்: ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஸ்மார்ட் வாட்ச்களுக்கான மைக்ரோ எல்இடி-ஐ சொந்தமாக தயாரிக்கும் முடிவெடுத்து அதற்கென ஊழியர்களை நியமித்து வேலை செய்து வந்தது. ஆனால் அந்த திட்டத்தை ஆப்பிள் கைவிட்டுவிட்டது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தங்களது பொறியாளர்கள் குழுவில் வேலை செய்து வந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இவர்களில் சிலர் ஆப்பிளிலேயே வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர், சிலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐபிஎம் நிறுவனம்: ஐபிஎம் நிறுவனம் தங்களது ஊழியர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை பணி நீக்கம் செய்துள்ளது. நிறுவனத்தின் தகவல் தொடர்பு துறையை சேர்ந்த ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர். தகவல் தொடர்பு துறை தலைமை அதிகாரி ஜொனார்த்தன், ஊழியர்களுடனான மீட்டிங்கில் இதனை அறிவித்தார்.
செயற்கை நுண்ணறிவால் செய்யக் கூடிய பணிகளுக்கு ஆட்களை நியமனம் செய்ய போவதில்லை என ஐபிஎம் தலைமை செயல் அதிகாரி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
டர்னிடின்: டர்னிடின் நிறுவனம் பிளேஜரிஸம் தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது. இங்கே 18 மாதங்களில் 20% பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவை கொண்டு வேலைகளை செய்து வருவதால் ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்வது தெரிய வந்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications