இந்தியா வருகை தந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஆகியோர் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியை சந்தித்து பேசினர். அப்போது ரிலையன்ஸின் ஆலைகளையும் பார்வையிட்டு பல முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட மார்க்கோ ரூபியோ எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள், டேட்டா சென்டர்கள் உள்ளிட்டவை குறித்து முகேஷ் அம்பானியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

வழக்கமான எரிசக்தி மற்றும் பசுமை எரிசக்தி துறைகளில் அமெரிக்க நிறுவனங்களோடு வர்த்தக ரீதியான கூட்டாண்மைகளை உருவாக்குவது குறித்து முகேஷ் அம்பானியும் மார்க்கோ ரூபியோவும் ஆலோசனை நடத்தியுள்ளனர். நம்பகமான மற்றும் மலிவான விலையில் எரிபொருள் விநியோகம், வலுவான விநியோக சங்கிலிகள் மற்றும் அதிகரித்து வரும் தேவையை சமாளிக்க போதுமான முதலீடுகள் குறித்து பேசப்பட்டதாக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எரிசக்தியும் டிஜிட்டல் உள்கட்டமைப்பும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கும் டேட்டா சென்டர்களுக்கு தேவையான மின்சார விநியோகத்தின் முக்கியத்துவம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாம்.
குஜராத்தின் ஜாம்நகரில் கட்டப்பட்டு வரும் ரிலையன்ஸின் புதிய எரிசக்தி ஜிகா-தொழிற்சாலைகள் மற்றும் டேட்டா சென்டர்களின் பணிகளை மார்க்கோ ரூபியோ நேரில் பார்வையிட்டார். சோலார் எனர்ஜி, ஆற்றல் சேமிப்பு , எலக்ட்ரோலைசர்கள் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ரிலையன்ஸ் மேற்கொண்டு வரும் பசுமை எரிசக்தி திட்டங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தாராம்.
இந்தியா உலகின் எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசாக உருவெடுத்து வருவதை மார்க்கோ ரூபியோ அப்போது பாராட்டியுள்ளார். மேலும், வெனிசுலா கச்சா எண்ணெயை அதிகளவில் பயன்படுத்துவது குறித்தும், ரஷ்யா டீசல் விநியோகம் உள்ளிட்டவையும் இந்த ஆலோசனையில் முக்கிய இடம் வகித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த பயணத்தின் போது, விலங்குகள் பாதுகாப்பு மையமான ஆனந்த் அம்பானியின் வந்த்ரா மற்றும் ஜாம்நகரில் உள்ள பல்வேறு கட்டமைப்புகளையும் மார்க்கோ ரூபியோ பார்வையிட்டார். அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ இந்த முறை டெல்லிக்கு செல்லாமல் மும்பை, குஜராத்துடன் தனது பயணத்தை முடித்து கொண்டார்.
முன்னதாக மும்பையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்திருந்தார். இந்த பயணத்தில் முகேஷ் அம்பானி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற 2 முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று வெனிசுலாவில் இருக்கும் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான உரிமம் அம்பானிக்கு கொடுத்ததும், அதிகளவில் வெனிசுலா எண்ணெயை சுத்திகரித்து பயன்படுத்த அறிவுறுத்துவது. இரண்டாவது டெக்சாஸில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ரிலையன்ஸ் அமைக்கும் என கடந்த மார்ச் மாதம் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.எனவே எரிபொருள் கொள்முதல் , விற்பனை இரு நாட்டு நிறுவனங்களிடையே ஒத்துழைப்பு , டேட்டா செண்டர்கள் ஆகியவை தான் இந்த சந்திப்பின் மையப்புள்ளியாக அமைந்துள்ளன.


Click it and Unblock the Notifications

