அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் இந்தியாவுக்கு வருகை தர இருக்கிறார் என்ற நல்ல தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்தாலும் வர்த்தகம் , வரி உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே சில சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடி எனக்கு மிகவும் பிடிக்கும், நல்ல மனிதர் என்றெல்லாம் அடிக்கடி பாராட்டுவார். ஆனால் அவரே தான் கடந்த ஆண்டு இந்திய பொருட்களுக்கு அதிகபட்சமாக 50% இறக்குமதி வரி விதித்து அதிர்ச்சி தந்தார். இதனால் இந்தியா அமெரிக்கா உறவிலும் லேசான விரிசல் ஏற்பட்டது. பின்னர் இருதரப்புக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தன. தற்போதைக்கு இருதரப்புக்கும் இடையே முதல்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகும் வகையில் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை புதுப்பிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா அண்மைகாலமாக தீவிரபடுத்தி இருக்கிறது. அந்த வகையில் விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை தருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான ரூபியோ, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருவார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்திய வருகைக்கான பணிகளில் அமெரிக்க நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக ரூபியோ குறிப்பிட்டுள்ளார். ஐஏஎன்எஸ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் டிரம்பின் இந்திய வருகையை உறுதி செய்யும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தானும் இந்தியா வரப்போவதாக அவர் கூறியுள்ளார். அப்போது டிரம்பின் வருகைக்கான பணிகளை மேற்பார்வையிட போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மிக விரைவில் இது கையெழுத்தாகும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்காவின் மிக நெருங்கிய மற்றும் முக்கியமான கூட்டாளி என கூறிய ரூபியோ , பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதிபர் டிரம்ப்பிற்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாக இருப்பதாக குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் 2020 ஆண்டு இந்தியா வந்திருந்தார். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறை. அதே வேளையில் 2020ஆம் ஆண்டுக்கு பின் அதாவது 5 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் இந்திய பயணம் அமைந்துள்ளது. மோடி கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்கா சென்றிருந்தார்.
டிரம்ப் இந்தியா வரவில்லை என்றாலும் பல முறை டிரம்பும், மோடியும் சந்தித்துள்ளனர். அண்மையில் கூட பிரான்ஸில் நடந்த ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக் மோடியும் டிரம்பும் சந்தித்து பேசி கொண்டனர். இந்நிலையில் டிரம்ப் இந்தியா வருகை தருவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

