மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கு ஒரு திருப்புமுனையாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 70% மாற்றுத்திறனாளியான ஒரு மகள், தனது மறைந்த தந்தையின் குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கு, அவர் திருமணமானவர் என்பதற்காகவோ அல்லது அவரது கணவர் அரசுப் பணியில் இருந்து வருமானம் ஈட்டுகிறார் என்பதற்காகவோ மறுக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன..?: சுரேந்தர் பால் என்பவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு காலமானார். அவரது மனைவி ஏற்கனவே இறந்ததால், 70% மாற்றுத்திறனாளியாகவும், வாழ்வாதாரம் ஈட்ட முடியாத நிலையில் இருந்த அவரது மகள், தந்தையின் குடும்ப ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், அரசு அதிகாரிகள் பஞ்சாப் சிவில் சர்வீஸ் விதிகளின்படி, மகளின் கணவரின் வருமானம் (ஆண்டுக்கு ரூ.4,22,502) அதிகமாக இருப்பதால், அவர் ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவர் என்று கூறி, கோரிக்கையை நிராகரித்தனர்.
அரசின் இந்த முடிவை எதிர்த்து மகள் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (CAT) முறையிட்டார். ஆனால், தீர்ப்பாயமும் அரசின் முடிவையே உறுதி செய்தது. இதையடுத்து, மாற்றுத்திறனாளி மகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் மே 21, 2025 அன்று அவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன..?: நீதிமன்றம் பஞ்சாப் சிவில் சர்வீஸ் விதிகளில் உள்ள முக்கிய அம்சங்களை விரிவாக ஆய்வு செய்தது. நீதிமன்றத்தின் முக்கிய வாதம் என்னவென்றால், விதிகளின்படி, ஒரு பெண் மன அல்லது உடல் குறைபாடு காரணமாக தன் வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாதவராக இருந்தால், அவர் திருமணம் செய்திருந்தாலும் கூட, வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியத்தைப் பெற உரிமை உண்டு. அவரது திருமண நிலை இங்குப் பொருத்தமற்றது.
கணவரின் வருமானம் கணக்கில் வராது : 25 வயதுக்கு மேற்பட்ட, வாழ்வாதாரம் ஈட்ட முடியாத மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கும்போது, அவரது கணவரின் வருமானம் குடும்பத்தின் வருமானமாகவோ அல்லது அவரது வருமானமாகவோ கணக்கில் கொள்ளப்படக் கூடாது என்று நீதிமன்றம் மிக தெளிவாக கூறியுள்ளது.
70% மாற்றுத்திறனாளி மகளுக்கு ஓய்வூதியம் மறுக்க, 100% மாற்றுத்திறனாளியான அவரது கணவரின் வருமானத்தை அரசு அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொண்டது, விதிகளுக்கு எதிரானது என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இந்தத் தீர்ப்பு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மகள்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வைபவ் பரத்வாஜ் இது குறித்து கூறுகையில், "ஒரு ஓய்வூதியதாரரின் மாற்றுத்திறனாளி மகளுக்கு, அவர் திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக அல்லது கணவர் வருமானம் ஈட்டுகிறார் என்பதற்காக குடும்ப ஓய்வூதியத்தை மறுக்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்கிறது" என்று விளக்கினார்.
உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், மாற்றுத்திறனாளி மகளுக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதியத்தை விடுவிக்கவும், நிலுவைத் தொகையுடன் 9% வட்டி வழங்கவும் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த செலவுக்காக ரூ.25,000 தொகையை அவருக்கு வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.


Click it and Unblock the Notifications