பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்கள் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் ட்விட்டர் புளூடிக் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் 8 டாலர் என்பது பெரிய தொகை எனவும் ஒரு சமூக வலைத்தளத்திற்கு இந்த தொகை அதிகம் என்றும் பல பயனாளர்கள் கருதிய நிலையில் ஒருசில பயனாளிகள் புளூடிக்கை இழக்கவும் தயாராக உள்ளனர்.
அந்த வகையில் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவ்ரதிலோவா, ட்விட்டர் புளூடிக் தனக்கு தேவையில்லை என்றும் அதற்காக பணம் கட்ட முடியாது என்றும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எலான் மஸ்க்
உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்தியரான சி.இ.ஓவை அதிரடியாக நீக்கியது, தும் போலி கணக்குகளை கண்டறிந்து அதனை நீக்குவது உள்பட பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் புளூடிக்
இந்த நிலையில் ட்விட்டரில் பிரபலங்கள் வைத்திருக்கும் புளூடிக் கணக்குகளுக்கு மாதம் 8 டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 650 ரூபாய் வசூல் கட்டணம் செலுத்த வேண்டும் என நேற்று முன்தினம் இரவு அதிகாரபூர்வமாக எலான் மஸ்க் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல புளூடிக் பயனாளிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருசிலர் புளூடிக் வசதியை இழக்கவும் தயாராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ட்டினா நவரதிலோவா
இந்த நிலையில் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரதிலோவா நான் புளூடிக் வசதியை கேட்கவே இல்லை என்றும், திடீரென ஒருநாள் தானாகவே என் பக்கத்தில் புளூடிக் தோன்றியது, எனக்கு புளூடிக் வசதி தேவை இல்லை என்றும், அதற்காக நான் பணம் செலுத்த தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். புளூடிக்கை என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து அகற்றினாலும் எனக்கும் என்னுடைய ஃபாலோயர்களுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் ஸ்டீவன் கிங்
ஏற்கனவே பிரபல எழுத்தாளர் ஸ்டீபன் கிங் அவர்கள் புளூடிக் வசதிக்கு பணம் வசூல் செய்வதற்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவ்வப்போது புதிய செய்திகளை பதிவிடும் தங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
கடும் விமர்சனம்
எலான் மஸ்க்கின் கட்டண அறிவிப்பு குறித்து அவரிடமே டுவிட்டர் மூலம் பல பயனாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதும் ஆனால் அந்த அனைத்து விமர்சனங்களையும் எலான் மஸ்க் கண்டுகொள்ளாமல் ட்விட்டர் நிறுவனத்தை வெறும் விளம்பர வருமானத்தை வைத்து மட்டுமே நடத்த முடியாது என்றும் சிறப்பான சேவையை செய்ய வேண்டும் என்றால் கட்டணம் வசூலித்து தான் ஆக வேண்டும் என்றும் தனது அறிவிப்பை நியாயப்படுத்தினார். பல பிரபலங்கள் புளூடிக் கட்டணத்திற்காக தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் இந்த கட்டணத்தை எலான் மஸ்க் ரத்து செய்வாரா? அல்லது குறைப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications