மும்பை: கொரோனாவின் தாக்கத்தினால் முற்றிலும் உற்பத்தி மற்றும் விற்பனை முடங்கிய நிலையில், வாகன நிறுவனங்கள் பெருத்த அடியை வாங்கி வருகின்றன எனலாம்.
அதிலும் கடந்த ஆண்டே மோசமான பொருளாதார நிலைமை காரணமாக ஆட்டோமொபைல் துறை பெரும் பின்னடைவை கண்டது.
இதில் நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகியும் அடங்கும்.
உற்பத்தி தொடக்கம்
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நான்காவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான வாகன நிறுவனங்கள் உற்பத்தியை மீண்டும் தொடங்க முடியாமல் தவித்து வருகின்றன. எனினும் சில இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி சில இடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
ரொக்க இருப்பு
லாக்டவுனில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, சில நிறுவனங்களில் சரியான மூலதனம் இன்மையால் உற்பத்தியை தொடங்க முடியாத நிலையே இருந்து வருகிறது. எனினும் மாருதி சுசூகி அந்த வகையில் பரவாயில்லை எனலாம். ஏனெனில் மாருதி சுசூகியை மீட்க 5 பில்லியன் டாலர் ரொக்க இருப்புகள் உள்ளதே. இது மாருதி சுசூகி தொடர்ந்து களத்தில் இறங்கி வேலை செய்ய பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விற்பனை வீழ்ச்சி தான்
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான மிகப்பெரிய கார் தயாரிப்பாளர், கடந்த நான்காம் காலாண்டில் வாகன விற்பனையானது பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் முக்கிய வர்த்தகமாக கார் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தினை விட, அந்த நிறுவனத்தின் நிதி வருமானம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் லாபம் அதிகரிப்பு
குறிப்பாக முதல் முறையாக நிதி வருவாய் 2020ம் நிதியாண்டில் 50%மாக உள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. இது கிட்டதட்ட முக்கிய வர்த்தகத்தின் செயல்பாட்டு லாபமான (கார்) 3,776 கோடி ரூபாய்க்கு சமம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலமான தள்ளுபடி
மேலும் ஒரு காருக்கான லாப விகிதமும் குறைந்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சந்தையில் நிலவி வந்த அழுத்தம் காரணமாக அதிக தள்ளுபடியை வழங்கினோம் என்று சுட்டிக்காட்டியுள்ளது மாருதி. இதே 2020ம் நிதியாண்டில் விற்பனையும் 16% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரொக்க கையிருப்பு
மாருதி சுசூகியின் ரொக்க கையிருப்பும் முந்தைய நிதியாண்டில் 4000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன் மொத்த ரொக்க இருப்பானது 35,248 கோடி ரூபாயாக, அதாவது அதன் சந்தை மூலதனத்தின் கால் பங்கிற்கு சமம் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பயணிகள் கார் சந்தையில் மந்த நிலை ஏழு காலாண்டுகளூக்கு மேலாக நீடித்து வருகின்றது, மேலும் மோசமான சூழ்நிலையால் 2021ம் நிதியாண்டில் வாகன விற்பனையானது 25 - 30% வீழ்ச்சி காணலாம் என்றும் தெரிவித்துள்ளது.
விற்பனை சரியக் கூடும்
மாருதி சுசூகியின் உள் நாட்டு விற்பனையானது 2011க்கு பிறகு முதல் முறையாக 1 மில்லியன் யூனிட்களூக்கு கீழே சரியக்கூடும் என்றும் கூறுகிறது. எனினும் மாருதி சுசூகியின் தலைவர் ஆர் சி பார்கவா இது குறித்து கூறுகையில், நாட்டில் நீண்டகால வளர்ச்சி இருக்கும் என்று நிறுவனம் நம்புவதாகவும் கூறியுள்ளார். எனினும் தற்போதைய நிலையில் உற்பத்தி, சப்ளை மற்றும் தேவையில் நிச்சயமற்ற நிலையே இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications