இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா (Maruti Suzuki India), தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாகனப் பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றும் நோக்கில், ஒரு முக்கியமான முதலீட்டை செய்துள்ளது.
அதாவது, இணைப்புத் திறன் கொண்ட வாகனங்களில் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை (AI solutions) வழங்கும் ராவ்விட்டி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் (Ravity Software Solutions) என்ற பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில், சுமார் ரூ.2 கோடி முதலீடு செய்துள்ளது. மாருதியின் 'இன்னோவேஷன் ஃபண்ட்' திட்டத்தின் கீழ் செய்யப்படும் 3-வது முதலீடு இதுவாகும். இதன் மூலம் ராவ்விட்டி நிறுவனத்தில் 7.84% பங்குகளை மாருதி சுசுகி பெற்றுள்ளது.

எதற்காக AI முதலீடு..?: மாருதி சுஸுகி இந்த முதலீட்டை செய்ததற்குப் பின்னால் ஒரு முக்கியமான நோக்கம் உள்ளது. இந்நிறுவனம், தங்கள் செயல்பாடுகளுக்கு துணைபுரியும் வலுவான தொழில்நுட்பப் புதுமைகளைக் கொண்ட ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க விரும்புகிறது.
ராவ்விட்டி நிறுவனம் ஒரு சிறப்பு வாய்ந்த செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த தளம், வாகன நிறுவனங்கள் மற்றும் பெரிய வாகனங்களை இயக்கும் குழுக்கள் தங்கள் வாகனங்களில் உள்ள இணைப்பு தரவுகளை பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.
இதன் மூலம், நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் பொறியியல் குறைபாடுகள், தயாரிப்பின் தரம், தினசரி செயல்பாடுகள், வருவாயை அதிகரிக்கும் வாய்ப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் அனுபவம் ஆகியவற்றை மிக துல்லியமாக மேம்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தை பயன்படுத்தும் விதம் குறித்த தரவுகள் கிடைப்பதால், அவர்களுக்கு தேவைப்படும் மேம்பட்ட சேவைகளை விரைவாக வழங்க முடியும்.
வாடிக்கையாளர் திருப்தியே முக்கியம் : மாருதி சுஸுகியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹிசாஷி டகியூச்சி பேசுகையில், "எங்கள் தொழிலின் மையத்தில் வாடிக்கையாளர்களை வைப்பதுதான் எங்கள் அடிப்படை மதிப்பு. அதற்கேற்ப, வாகன உரிமையாளர் அனுபவத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துகிறோம்.
புதிய சிந்தனைகள் மற்றும் அதிநவீன தீர்வுகளை கொண்டு வருவதில் ஸ்டார்ட்அப்கள் சிறந்த கூட்டாளிகளாக உள்ளன. இந்த முதலீடு, தரவு சார்ந்த நுண்ணறிவுகள் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் உயர்த்தி, அரசாங்கத்தின் 'ஸ்டார்ட்அப் இந்தியா' முயற்சிக்கும் ஆதரவாக இருக்கும்" என்று கூறினார்.
ராவ்விட்டி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனர் விகாஸ் ரூங்டா கூறுகையில், "மாருதி சுஸுகி போன்ற ஒரு தொழில்துறை தலைவருடன் கூட்டு சேர்வது பெருமை. ஒரு மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம், ஒரு சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் கைகோர்ப்பது, அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையையும், புதிய யோசனைகளைக் கற்றுக் கொள்ளும் மனப்பான்மையையும் காட்டுகிறது. எங்கள் ஏ.ஐ. தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன், மாருதி சுசுகி வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் உறுதியாக காப்பாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications