இந்தியாவின் முன்னணி கம்பெனிகள், நிதி நிலையில் வலுவாக இருக்கும் கம்பெனிகள் கூட, கொரோனா வைரஸ் பிரச்சனையில் இருந்து எளிதில் மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதற்கு சாட்சியாக, மாருதி சுசூகியின் (Maruti Suzuki) கன்சாலிடேடட் (Consolidated) காலாண்டு முடிவுகள் வந்து இருக்கின்றன.
இந்தியாவின் கார் சந்தையில் சுமாராக 50 சதவிகித சந்தையை, தன் கைக்குள் வைத்திருக்கும் Maruti Suzuki கம்பெனி நஷ்டத்தைக் காட்டி இருக்கிறது.

17 ஆண்டுகளில் முதல் முறை
2003-ம் ஆண்டு தான், மாருதி சுசூகி இந்தியா கம்பெனி, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. அதன் பின் ஒரு முறை கூட, மாருதி சுசூகி நஷ்டத்தைக் காட்டியது இல்லை. ஆனால் கடந்த 17 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஜூன் 2020 காலாண்டில் 268 கோடி ரூபாயை கன்சாலிடேடட் நஷ்டமாகக் காட்டி இருக்கிறது.

கொரோனா வைரஸ்
இந்த நஷ்டத்துக்கு கொரோனா வைரஸ் பிரச்சனையை காரணமாகச் சொல்லி இருக்கிறது மாருதி சுசூகி நிர்வாகம். கொரோனா வைரஸ் உடன், நோயைக் கட்டுப்படுத்த அறிவித்த லாக் டவுன் காரணத்தாலும் மாருதி சுசூகியின் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறதாம். மாருதி சுசூகியின் செயல்பாட்டுச் செலவுகளும் குறைந்து இருக்கிறதாம்.

வருவாய் அடி
மாருதி சுசூகி நிறுவனத்தின் வருவாய் 78.67 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். கடந்த ஜூன் 2019 காலாண்டில் 19,273 கோடி ரூபாயாக இருந்தது வருவாய். ஆனால் இந்த ஜூன் 2020 காலாண்டில் வெறும் 4,110 கோடி ரூபாயைத் தான் வருவாய் ஈட்டி இருக்கிறார்களாம். ஆக கார் வியாபாரம், ஜூன் 2020-ல் எப்படி இருந்து இருக்கிறது என்பதை இங்கே புரிந்து கொள்ள முடிகிறது.

Maruti Suzuki விற்பனை
கடந்த ஏப்ரல் 2020 - ஜூன் 2020 வரையான கால கட்டத்தில் மாருதி சுசூகி இந்தியா கம்பெனி, 76,599 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறார்களாம். இது கடந்த ஜூன் 2019 காலாண்டில் விற்பனை செய்த 4.02,600 வாகனங்களை விட 81 சதவிகிதம் சரிவாம்.

கணிப்புகளைத் தாண்டிய மாருதி சுசூகி
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் கம்பெனி, மாருதி சுசூகியின் நஷ்டம் 383 கோடி ரூபாயாக இருக்கலாம். வருவாய் 3,626 கோடி ரூபாயாக இருக்கலாம் எனக் கணித்து இருந்தது. ஆனால் அதையும் தாண்டி, மாருதி சுசூகி நஷ்டத்தை குறைத்து இருக்கிறது, வருவாயை அதிகரித்து இருக்கிறது.