ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான சாப்ட்பேங்க் குழுமத்தின் நிறுவனர் மசாயோஷி சன், புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பில் எதைப்பற்றி விவாதிக்கப்படும் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதிய கூட்டணி முயற்சிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆய்வு செய்வது தொடர்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் சந்திப்பதற்கு முன்னதாக, மசாயோஷி சன் இந்தியாவின் பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியை சந்தித்துப் பேசியுள்ளது தான் மசாயோஷி சன்-ன் இந்திய பயணத்தில் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
முகேஷ் அம்பானியும் - மசாயோஷி சன் இருவரும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு துறையில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவரின் கூட்டணி, இந்தியாவில் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே முகேஷ் அம்பானி மற்றும் என்விடியா நிறுவனத்துடன் இணைந்து ஏஐ தொழில்நுட்ப கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளை நடத்தி வரும் வேளையில், தற்போது ஜப்பான் சாப்ட்பேங்க் குழுமமும் இதில் இணைய உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சாப்ட்பேங்க் இந்தியாவில் பல முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் ஸ்விக்கி நிறுவனத்தின் ஐபிஓ-வில் பெரும் தொகையை சாப்ட்பேங்க் சம்பாதித்தது. மேலும், ஆஃப் பிசினஸ் என்ற இந்திய ஆன்லைன் மார்க்கெட் பிளேஸ் நிறுவனத்திலும் சாப்ட்பேங்க் முதலீடு செய்துள்ளது, இது 2025 ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடியுடன் வரும் சந்திப்பு இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் கூட்டு முயற்சிகள் மற்றும் முதலீடுகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 வருடத்தில் முகேஷ் அம்பானி அதிகப்படியான தொகையை டெலிகாம், டெக் துறையில் முதலீடு செய்துள்ளது. ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தான் ஆஸ்தான வர்த்தகமாக இருந்தாலும், கடந்த 10 வருடத்தில் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications