மணமகன் மற்றும் மணமகள் தேடுவதற்காக பலரும் மேட்ரிமோனி நிறுவனங்களை அணுகுவது இயல்பான ஒன்றுதான். அப்படி ஒரு மேட்ரிமோனி நிறுவனம் தன் மகனுக்கு ஏற்ற மணமகளை கண்டுபிடிக்க தவறியதற்காக தனது வாடிக்கையாளருக்கு 60,000 ரூபாயை வழங்கியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த மேட்ரிமோனி நிறுவனமான தில்மில் நிறுவனத்திடம் சொன்னபடி மணமகள் தேடி தராத காரணத்திற்காக இழப்பீடு வழங்குமாறு பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணமகனின் தந்தை தனது மகனுக்கு வரன் தேடுவதற்காக இந்த மேட்ரிமோனி நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார். அதன் பிறகு அவர்களுடைய சர்வீஸ் குறித்து சில கேள்விகளை கேட்டதால், நிறுவனம் தன்னை சரிவர நடத்தவில்லை என்று கூறி மணமகனின் தந்தை அந்த மேட்ரிமோனி நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

என்ன நடந்தது?: டெக்கான் ஹெரால்ட்டில் வெளியான செய்தியின்படி, நீதிபதி ராமச்சந்திர எம்.எஸ் தலைமையிலான பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம், அக்டோபர் 28-ஆம் தேதி அன்று இந்த உத்தரவை பிறப்பித்ததாகத் தெரிவித்துள்ளது.
மணமகனின் தந்தையான குமார், இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது மகன் பாலாஜிக்கு பொருத்தமான மணமகளை கண்டுபிடிப்பதற்காக தில் மில் மேட்ரிமோனியல் நிறுவனத்தை அணுகியுள்ளார். இந்த நிறுவனத்தை தனது சமூக ஊடக விளம்பரத்தை பார்த்த பிறகு தொடர்பு கொண்டுள்ளார். தில்மில் குழுவினர் ஒரு மாதத்திற்குள் அவருடைய மகனுக்கு சிறந்த மணப்பெண்ணை கண்டுபிடித்துத் தருவதாக உறுதி அளித்து ஆரம்ப கட்டணமாக 30,000 ரூபாயை செலுத்த சொல்லி இருக்கின்றனர்.
அதன் பிறகு ஏப்ரல் மாதம் இது குறித்து குமார் கேட்டபோது நிறுவன தரப்பில் எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை. நிறுவனத்தின் ஊழியர்கள் அவரை ஏப்ரல் இறுதிவரை காத்திருக்கச் சொல்லி இருக்கின்றனர். ஏப்ரல் மாதம் முடிந்த பிறகும் ஒரு வரன் கூட தனக்கு அனுப்பப்படவில்லை என்று குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் இந்த ஆண்டு மே மாதம் கல்யாண் நகரில் உள்ள தில்மில் மேட்ரிமோனி நிறுவனத்திற்கு குமார் நீதிமன்ற நோட்டீசை அனுப்பியுள்ளார். நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பிய பிறகும் நிறுவனம் எந்தவித பதிலையும் வழங்கவில்லை. பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் அக்டோபர் 28-ஆம் தேதி அன்று தில்மில் நிறுவனத்திற்கு 6 சதவீத வட்டியுடன் 30,000 ரூபாயை திருப்பித் தரவும், மோசமான சேவைக்கான இழப்பீடாக 20,000 ரூபாயை திருப்பித் தருமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.5,000 மற்றும் சட்ட நடவடிக்கைக்காக கூடுதலாக 5000 ரூபாயை வழங்குமாறும் தில்மில் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
2018-ஆம் ஆண்டு வெளியான உத்தரவை முன்னிலைப்படுத்தி நுகர்வோர் நீதிமன்றம், எதிர் தரப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினாலோ அல்லது அவர்கள் தரப்பிலிருந்து எந்தவித மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட உண்மைகளாக கருதப்படலாம் என்று தெரிவித்தது.


Click it and Unblock the Notifications