டிஜிட்டல் தளங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, மோசடி சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நபர் பலியாகியுள்ளார்.நம்பிக்கை மோசடி செய்து வந்த கும்பல், இப்போது அடுத்தவரின் உணர்விலேயே விளையாடத் தொடங்கியுள்ளனர். இதற்கு சான்றாய் 50 வயதான நபர் ரூ. 56 லட்சத்தை இழந்திருக்கிறார். சம்பவம் எப்படி நடந்தது? மோசடிக்காரர்கள் தங்கள் வலையை எப்படி விரித்தார்கள்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.
ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் கல்யாண். இவர் தனக்கான வாழ்க்கை துணையைத் தேடி பிரபல மேட்ரிமோனி தளம் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். தனக்கான ப்ரொபைலையும் உருவாக்கி வைத்துள்ளார். வழக்கம் போல மார்ச் 10.-ஆம் தேதி என்று மணப்பெண் தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சைத்ரா என்ற பெயரில் ஒரு ப்ரொபைல் காண்பிக்கப்பட்டுள்ளது. அதை பார்த்ததும் கல்யாணுக்கு ஆர்வம் மிகுந்தது.
உடனே சைத்ராவுக்கு விருப்பம் தெரிவித்து மெசேஜ் அனுப்பியுள்ளார். பின்னர் சைத்ரா மற்றும் கல்யாணம் தொடர்ந்து பேச தொடங்கியுள்ளனர். சைத்ரா தான் மும்பையில் பணி புரிவதாகக் கூறி கல்யாணை வாட்ஸ்அப் சாட்டிற்கு வர வைத்துள்ளார். தினமும் வாட்ஸ்அப்பில் பேசி கல்யாணின் நம்பிக்கையை முழுமையாக பெற்றார் சைத்ரா. 'விரைவில் வந்து உங்களை சந்திக்கிறேன்' என்று கல்யாண் கூறும் அளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

பின்னர் சில நாட்களில் நடந்தது தான் ஹைலைட். சைத்ரா மெல்ல மெல்ல தனது வலையை வீசத் தொடங்கியுள்ளார். திருமண ஆசை வார்த்தை காட்டி கல்யாணின் உணர்வுகளில் விளையாடிய சைத்ரா, பின்னர் ஃபாரெக்ஸ் டிரேடிங் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
வீட்டிலிருந்து கொண்டே கோடிகளில் புரளலாம் என்று சைத்ரா சொன்னதை கேட்டதும் கல்யாணுக்கு ஆர்வம் தாங்கவில்லை. தானும் முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசை எட்டிப் பார்த்துள்ளது. அதற்கேற்ப சைத்ராவும் பிறர் சம்பாதித்ததாக கூறி சில போலி ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்திருக்கிறார்.
சைத்ரா சொல்வதனைத்தும் உண்மையானது தான் என்று நம்பிய கல்யாண், அவர் அனுப்பிய "m.ftmohub.cc" என்ற போலி இணையதளத்தில் விபரங்களை பூர்த்தி செய்து உள் நுழைந்துள்ளார். முதலில் அவர் ரூ.50,000-த்தை முதலீடு செய்துள்ளார். அதற்கு அந்த இணையதளத்தில் அதிக லாபம் கிடைத்தது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இதே ட்ரிக்கை தான் இன்றைய ஸ்கேமர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அப்பாவி மக்களை முதலீடு செய்ய வைத்து, தாங்களே போலியாக உருவாக்கிய தளங்களில் அதிக லாபம் கிடைத்தது போல காண்பித்து, பிறரின் ஆசையை தூண்டுகின்றனர். இதனால் பாதிக்கப்படுபவர்களும் தங்களுக்கு அதிக லாபம் கிடைத்ததாக உணர்ந்து, தொடர்ந்து முதலீடு செய்கின்றனர். இதைத்தான் கல்யாணும் செய்திருக்கிறார். ரூ.50,000-த்தை அனுப்பிவிட்டு, அதன் பிறகு RTGS மற்றும் IMPS ட்ரான்ஸ்பர் மூலமாக சுமார் ரூ.56 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
மொத்தமாக முதலீடு செய்து விட்டு, தன்னுடைய லாபத்தை எடுக்கப் பார்த்துள்ளார் கல்யாண். அங்கு தான் பிரச்சனையே ஆரம்பமானது. அதுவரை தொடர்ந்து முதலீடு செய்ய வைத்த சைத்ரா பின்னர் வரி மற்றும் பிராசசிங் கட்டணம் செலுத்தினால் தான் பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். "எனக்கு லாபமே வேண்டாம். அசலயாவது திருப்பி கொடுங்க!" என்று கெஞ்சும் அளவிற்கு போயுள்ளார் கல்யாண். ஆனால் என்ன பிரயோஜனம்.. அதற்கு சைத்ரா தரப்பிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது கல்யாணுக்கு தெரியவந்தது. உடனே கல்யாண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது போலீசார் ஐடி சட்டம், பிஎன்எஸ் பிரிவு 318 மற்றும் 319 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பேராசை பெரு நஷ்டம் என்பதற்கு இந்த பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. திருமண தளங்களில் பேசுபவர்கள் திருமணத்தை விடுத்து பணத்தைப் பற்றி பேசினால் அது போலியாக இருக்கலாம் என்பதை உணருங்கள்! ஒருவேளை முன் பின் தெரியாதவர்கள் இதுபோன்ற தளங்களில் முதலீடு செய்ய சொன்னாலோ அல்லது பணத்தைப் பற்றிய பேச்சை எடுத்தாலோ, அங்கேயே ஃபுல் ஸ்டாப் வைத்து விடுங்கள்.
உங்களுக்கு உண்மையில் முதலீடு செய்ய திட்டமிருந்தால் செபியின் அங்கீகாரம் பெற்ற தளங்களைப் பயன்படுத்தலாம் அல்லது எவ்வளவோ அரசாங்க திட்டங்கள் இருக்கிறது அதில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம். அதை விடுத்து யார் என்றே தெரியாத நபர்களிடம் சிக்கினால் நஷ்டம் தான் ஏற்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications