ஒவ்வொரு மாதமும் பல நிதி சார்ந்த மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் நாளை பிறக்கவிருக்கும் மே மாதத்திலும் பல மாற்றங்கள் வரவுள்ளது. இவை சாமானியர்களின் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஏடிஎம் பயன்பாட்டிற்கான கட்டணங்களில் வரவிருக்கும் உயர்வு ஒருபுறம் இருக்க, வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு சற்று நிம்மதி பெருமூச்சு விடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதோடு, வருமான வரி தாக்கல் நெருங்கி வருவதால், அதற்குரிய ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதும் அவசியமாகிறது.
ஏடிஎம் கட்டண அதிகரிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்களை அதிகரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கட்டணங்கள் மே 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் என்பது ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் சேவைகளை வழங்குவதற்காக மற்றொரு வங்கிக்கு செலுத்தும் கட்டணமாகும்.

வாடிக்கையாளர்களுக்கும் ஏடிஎம் பயன்படுத்த மாதாந்திர இலவச வரம்பு இருக்கும். இந்த இலவச வழம்பை மீறி பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 23 வரை கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. பணம் எடுத்தாலும் சரி அல்லது பேலன்ஸ் விவரங்களை சரிபார்த்தாலும் சரி, இந்தக் கட்டணம் பொருந்தும்.
இந்தப் பரிவர்த்தனை கட்டண உயர்வு குறித்த தகவல்களை HDFC பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க் போன்ற வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளன. HDFC பேங்க் இணையதளத்திலும் 2025-ஆம் ஆண்டின் மே 1-ஆம் தேதி முதல் இலவச வரம்பை மீறி ஏடிஎம் பயன்படுத்துபவர்களுக்கு 21 ரூபாயாக இருந்த கட்டணம் 23 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல பஞ்சாப் நேஷனல் பேங்க்-இன் இணையதள தகவலின் படி 2025-ஆம் ஆண்டின் மே 9-ஆம் தேதி முதல் பிற வங்கிகளின் ஏடிஎம்களில் இலவச வரம்பை மீறும் பரிவர்த்தனைக்கு கட்டணம் 23 ரூபாயாகவும், பேலன்ஸ் விவரங்களை சரிபார்த்தால் 11 ரூபாயாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரிசர்வ் பேங்கின் ரெப்போ விகிதக் குறைப்பு: நிறைய பேர் ஹோம் லோன் பெற்றிருக்கின்றனர். மே மாதம் முதல் வீட்டுக் கடனின் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் ஏப்ரல் 9-ஆம் தேதி அன்று ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து அறிவித்தது.
இந்த விகிதம் 2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குப் பிறகு 2-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் இப்போது 6 சதவீதமாக இருந்து வருகிறது. தற்போது நடைபெற்ற பணவியல் கொள்கை கூட்டத்தின் முடிவிற்குப் பிறகு 6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. ரெப்போ விகிதம் என்பது எப்படி தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் மக்கள் வங்கிகளில் கடன் பெறுகின்றனரோ.. அதே போல வங்கிகளும் மத்திய வங்கிகளிடம் கடன் பெறும். வங்கிகளுக்கு வழங்கிய கடனுக்கு மத்திய வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதம் தான் ரெப்போ விகிதம்.
சில வங்கிகள் ரிசர்வ் வங்கியின் ஏப்ரல் மாத ரெப்போ விகிதக் குறைப்பின் பலன்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். ஏனெனில் அவை ரெப்போ விகிதத்தை பொறுத்து வழங்கக்கூடிய கடன்களை வழங்கி இருக்கும். இதனால் ஆர்பிஐ எப்பொழுதெல்லாம் வட்டியை குறைக்கிறதோ? அந்த வங்கியில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கும் வட்டி சுமை குறையும்.
ஐடிஆர் தாக்கல்: வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஏதுவாக வரி செலுத்துவோர், தங்கள் ஆவணங்களை சேகரிக்க வேண்டிய நேரம் இது. சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு வட்டி கிடைத்திருக்கிறது? என்பதை காண்பிக்கும் வங்கி அறிக்கைகள், வீட்டுக் கடனுக்கான வட்டி சான்றிதழ்கள், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் வருமானம், சொத்து விற்பனையின் மூலம் கிடைத்த வருமானம், இன்வாய்ஸ், ரசீதுகள், வருமானம் பெற்ற வங்கி அறிக்கைகள் போன்றவை இதில் அடங்கும். எளிதாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு உங்கள் அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையிலும், ஆவணங்களாகவும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆவணத்தின் துல்லியத்தையும் சரிபார்ப்பது நல்லது. மேலும் அவை புதுப்பித்த நிலையில் இருக்கிறதா? என்பதையும் ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications