கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதும் சேவை வழங்கி வரக்கூடிய சர்வதேச கன்சல்டன்சி நிறுவனமான மெக்கன்சி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் தங்கள் ஊழியர்களில் 10% பேரை வேலையில் இருந்து நீக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
ஃபைனான்சியல் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் 2023 ஆம் ஆண்டிற்கு பிறகு மெக்கன்சி நிறுவனம் பெரிய அளவு மறு கட்டமைப்பு செய்திருப்பதாகவும், இதன் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் தங்கள் ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் மெக்கன்சி நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 45 ஆயிரம் ஆக இருந்தது. தற்போது அது 40 ஆயிரமாக குறைந்து இருக்கிறது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டில் மெக்கன்சி நிறுவனம் தங்களுடைய செயல்பாடுகளை டிஜிட்டலாக மாற்றியது தங்கள் நிறுவனம் டிஜிட்டல் கன்சல்டிங் நோக்கி நகர்வதாக அறிவித்து அதிக அளவில் ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்தது. உலகம் முழுவதும் தங்களுடைய கிளைகளையும் விரிவாக்கம் செய்தது. ஐந்து ஆண்டுகளில் பலரை வேலைக்கு எடுத்த நிறுவனம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளிலேயே அவர்களில் 10% பேரை வீட்டிற்கு அனுப்பி இருக்கிறது.
மெக்கன்சி நிறுவனம் தங்கள் ஊழியர்களில் நிர்வாக பிரிவில் 1400 பேரை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது அதேபோல தரவு மற்றும் மென்பொருள் பொறியியல் துறையில் நிபுணத்துவம் பெற்றிருந்த 400 ஊழியர்களையும் மெக்கன்சி நிறுவனம் பணி நீக்கம் செய்திருக்கிறது. மெக்கன்சி நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கான செயல் திறன் வரைமுறைகளை மிகக் கடுமையாக்கி பல ஊழியர்களை வேலையில் இருந்து அனுப்பி இருப்பதாக ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
சர்வதேச அளவில் ஐடி மற்றும் பிற கன்சல்டன்சி சார்ந்த துறைகள் மந்த நிலையில் இருக்கின்றன. எனவே தான் இதுபோன்ற பெரிய நிறுவனங்களில் எல்லாம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இத்துடன் ஏஐ தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பும் இணைந்து இருக்கிறது. இருந்தாலும் மெக்கன்சி நிறுவனம் தங்கள் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருப்பதாகவும் கூடிய விரைவில் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யப் போகிறது என்றும் தெரிவித்து இருக்கிறது.
2025ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 130 நிறுவனங்கள் 60,000க்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது. கூகுள், மெடா, மைக்ரோசாப்ட், அமேசான் ஆகிய பெரு நிறுவனங்களும் இதில் அடங்கும்.


Click it and Unblock the Notifications